மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா(Ilayaraja) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 


1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். 






அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் இளையராஜா கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனத்தின் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் அவர் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதாவது மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கர் நிச்சயம்  பெருமைப்படுவார் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் மோடி குறித்த கருத்தை திரும்ப பெற மாட்டேன் என தன்னிடம் தெரிவித்ததாக இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் தெரிவித்திருந்தார். 


அப்போதே பாஜக சார்பில் அவர் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே கலை, அறிவியல், விளையாட்டு,பொருளாதாரம், இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமிப்பது வழக்கம். அந்த வகையில் எதிர்பார்த்ததைப் போலவே மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  


இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்த இளையராஜா என்ற மேதை தனது படைப்புகள் மூலம் பல வகையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்து இவ்வளவு தூரம் அவரை நியமன எம்.பியாக நியமனம் செய்யப்பட்டிருப்பது  மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண