Durai Vaiko: பிசானத்தூர் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற உதவியதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, துரை வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.
கிராம மக்கள் போராட்டம்:
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் கிராமத்தில், சுற்றியுள்ள எட்டு மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அழிப்பதற்காக, உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை தனியாரால் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது அறவழிப் போராட்டம் குறித்து கேள்விப்பட்ட திருச்சி எம்.பி. துரை வைகோ கடந்த 22ம் தேதி அந்த கிராம மக்களை நேரில் சந்தித்து தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.
துரை வைகோ தீவிரம்:
அத்துடன் பிசானூர் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படாமல் இருக்க அப்பகுதி எம்.பி. என்ற முறையில் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார். அப்போது ஆட்சியரும் மக்களின் விருப்பம் இல்லாமல் அங்கு ஆலை அமைக்கப்படாது என உறுதியளித்தார்.
அடுத்ததாக நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிசானத்தூர் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாகவும், அதனால் என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் பசுமை கிராமமாக குடியரசுத் தலைவர் விருது பெற்ற இந்த அழகிய கிராமத்தின் சுற்றுச்சூழல், விவசாயம், நீராதாரங்கள், மக்களின் உடல்நலம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வலியுறுத்தினார்.
அரசு கொடுத்த வாக்குறுதி..
இதனை கேட்டறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு முன் Consent to Establish (CTE) அனுமதியையும், கட்டுமானம் முடித்து அந்தத் தொழிற்சாலை தனது செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன் Consent to Operate (CTO) அனுமதியையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெறவேண்டும் என்றும், பிசானத்தூர் கிராமத்தில், உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) அமைக்க முதற்கட்ட Consent to Establish (CTE) அனுமதி மறுக்கப்படும் என உறுதியளித்தார். அதாவது, பிசானத்தூர் கிராமத்தில் இந்த உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை இனி அமைவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை துரை வைகோவிடம் தங்கம் தென்னரசு உறுதிபடுத்தியுள்ளார்.
முதலமைச்சருக்கு நன்றி..
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள துரை வைகோ, ”புதுக்கோட்டை மாவட்ட, பிசானத்தூர் கிராம மக்களுக்கு, அவர்களின் ஒற்றுமைக்கு, அவர்களின் அறவழி போராட்டத்திற்கு, அவர்களின் நம்பிக்கைக்கு கிடைத்த மாபெரும் வாழ்வாதார வரலாற்று வெற்றியாக கருதுகிறேன். இந்த நிலையை உருவாக்கித் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.