ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி பயன்படுத்தக் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்களிடம் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனு

 

உட்கட்சி பூசல் 

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.   இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறார். இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அடியாக அமைந்தது.

 


புகார் கொடுக்க வந்த அதிமுக வினர்


 

 

பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி

 

இதனைத்தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்தது. உச்சநீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது. இதுபோன்று சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியும் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தார். இருப்பினும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து, ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

 


மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்


 

 

காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் தொடங்கும் ஓபிஎஸ்

 

இந்தநிலையில், அடுத்த கட்ட நகர்வாக ஓபிஎஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். அதன்படி, செப்டம்பர் 3- இல் காஞ்சிபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை ஓ. பன்னீர்செல்வம் தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் அணியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

 

எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுகவினர்

 

இந்தநிலையில், ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுகவின் கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுகவினர் போர் கொடி தூக்கியுள்ளனர். காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் குவிந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.





செய்தியாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்


 

 

 

அதிமுகவினர் அளித்த புகார் மனுவில், அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட ஓபிஎஸ் அணியினர் நடத்தப்படும் குழுவினர்களால் செப்.3 ஆம் தேதி காஞ்சிபுரத்தில்  நடத்தப்படவுள்ள தமிழக முழுவதும்  சுற்றுப்பயணம் துவக்க பொதுக்கூட்டத்தில் அதிமுக கட்சி கொடி, தோரணம், சின்னங்களை பயன்படுத்த காவல் துறையினர் அனுமதி அளிக்கக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தின் பொழுது முக்கிய நகர்வுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கும் நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என இபிஎஸ் அணியினர் போர்க்கொடி தூக்கிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.