புதுச்சேரி: புதுச்சேரி ஜனநாயகத்தை பணபலத்தால் வாங்க முடியாது என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை பணபலத்தால் வாங்க முடியாது
புதுச்சேரி ஜனநாயகத்தை பணபலத்தால் வாங்க முடியாது என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில திமுக செயற்குழு கூட்டத்தில் மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் பேசியதாவது: –
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும். தொகுதிகள்தோறும் ரத்ததானம், மரக்கன்றுகள் நடுவது, நலத்திட்டங்கள் வழங்குவது போன்றவற்றை செய்ய வேண்டும். பல தொகுதிகளில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில தொகுதிகள் செய்யப்படாமல் உள்ளது. இது நம்மை அடையாளப்படுத்துவதற்கும், கட்சியின் வளர்ச்சியை சொல்வதற்குமாகும். அரசு பேனர் வைக்ககூடாது என கூறியுள்ளனர். நாம் முழுமையான ஒத்துழைப்பை அரசுக்கு கொடுக்க வேண்டும். உலகம் போற்றும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அந்த சாரலில் தான் புதுவையில் இந்த கட்சி 27 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் கூட இன்னும் வீறுகொண்டு தான் இருக்கிறது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும். நெல்லித்தோப்பு தொகுதியை நாம் அவரிடம் கொடுத்தோம். பிறகு அவர் செல்லும் போது நம்மிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அவர் வீதி வீதியாக சென்று எஸ்ஐஆர் பற்றி பதிவு செய்கிறார். அவர் நாம் வெற்றிப்பெறுவதற்க முழுமையாக உழைக்கிறார். கூட்டணிக்கு வேலை செய்ய தயாராகிவிட்டார்.
இன்றைக்கு புதுச்சேரியில் முதன்மை கட்சி திமுக தான். எந்த கட்சிக்கும் இதுபோன்ற கட்டமைப்பு கிடையாது. நூற்றாண்டுகள் கண்ட கட்சி, பல போராட்டங்களை கண்ட கட்சி. எத்தனையோ பண முதலாளிகள் புதுச்சேரியில் வேலை பார்த்தாலும், நம்மளை தொட்டு பார்க்க முடியாது. மக்களுக்காக தொண்டு செய்கிறோம். வாய்ப்பு இருந்தால் வெற்றி பெறுவோம், இல்லையென்றால் தொடர்ந்து சேவை செய்வோம். புதுச்சேரி மக்கள் நம்மளை நம்பி இருக்காங்க. அமைதியாக ஆர்பரிப்பு இல்லாமல் அரசியல் செய்கிறோம். 25 தொகுதிகளில் இன்று வெற்றி வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். யாருக்கு சீட் கொடுத்தாலும், வெற்றி பெற வைப்போம். நம்மை வீழ்த்த வீயூகம் அமைக்கின்றனர்.
பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் பெயரை கூறி ஒட்டு வாங்க முடியாது. நம் தொகுதிகளில் பல தொல்லைகள் கொடுக்கின்றனர். தன்மானம், சுயமரியாதை உள்ள புதுச்சேரி மக்களை பணத்தால் வாங்க முடியாது. இது மாநில சுயாட்சிக்காக போராடிய இயக்கம். இந்த ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்து கூறவேண்டும். தேர்தலில் கூறியதை ஒன்று கூட செய்யவில்லை. ஏர்போர்ட் விரிவாக்கம், ரயில் சேவை விரிவாக்கம், புதிய தொழில்சாலை எதுவும செய்யவில்லை. ஐடி பார்க் வரவேண்டும். இலவச மனைப்பட்டா கிடைக்க வேண்டும். வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.
லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்க வேண்டும். மூடப்பட்டுள்ள 19 பொது நிறுவனங்களை மீண்டும் திறக்க வேண்டும். அதிக காலம் முதல்வராக உள்ளவர் முதல்வர் ரங்கசாமி. இதுவரை ஒரு நிறுவனத்தை கூட அவர் திறக்கவில்லை. சேதராப்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலம் கிடப்பில் கிடக்கிறது. மின்துறையை தனியார் மயம் ஆக்குவதற்கு அரசு சார்பில் மின்மீட்டர் வாங்கி அதனை தனியாரிடம் ஒப்படைக்க பார்க்கின்றனர். அதனை வெளிப்படையாக அமல்படுத்த முடியவில்லை. மத்திய, மாநில அரசுகள் மாநில வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யவில்லை. இன்னும் இரண்டு மாதம் உள்ளது. இனிமேல் இவர்கள் கொண்டுவரும் திட்டங்களை செய்ய முடியாது.
பீகாரை போன்று வாக்கு திருட்டு, அரசு பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்க பார்ப்பார்கள். பணத்தால் புதுவை ஜனநாயகத்தை வாங்க முடியாது. புதுச்சேரி திமுககாரர்கள் தகுதியற்றவர்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். நாங்கள் புதிதாக தேர்தலை சந்திக்கவில்லை. பல தேர்தலை பார்த்தவர்கள். எந்தவித சலசலப்புக்கும் அஞ்சுவதில்லை. உங்களிடம் உள்ள பணத்தை வைத்து சர்க்கரை ஆலையை திறந்தால் நல்லது. தேர்தலுக்காக மாறுபவர்கள் நம் கூட்டணியில் இல்லை. 30 தொகுதிகளிலும் வேலை செய்ய சொல்லி இருக்கிறார்கள்.
கூட்டணி கட்சிக்காரர்களுக்கும் நாம் உழைக்க தயாராக இருக்கிறோம். எஸ்ஐஆர் பதியும் போது பெயர் நீக்கப்படுவது, பிஎல்ஓ எதிர்ப்பாக செயல்படுகிறார் போன்ற பிரச்னை இருந்தால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். சார்லஸ் மார்டின் பாஜகவின் பி டீம். தமிழக அரசின் சாதனைகளை சொல்லி நம் அணி வெற்றிபெற பாடுபடவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.