RSS Mohan Bhagwat: இஸ்லாமியர்களும், கிரிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர, அதன் தலைவர் மோகன் பகவத் சொன்ன நிபந்தனை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மோகன் பகவத் போட்ட கன்டிஷன்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் அமைப்பில் சேரலாம், ஆனால் மதப் பிரிவினையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருங்கிணைந்த இந்து சமூகத்தின் உறுப்பினர்களாக சேரலாம் என்று தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கேள்வி - பதில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மோகன் பகவத் பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இஸ்லாமியர்களுக்கு ஆர்.எஸ்.எஸில் அனுமதி உள்ளதா?
ஆர்.எஸ்.எஸ்ஸில் இஸ்லாமியர்களுக்கு அனுமதி உண்டா? என்ற கேள்விக்கு, "சங்கத்தில் எந்த பிராமணருக்கும் அனுமதி இல்லை. சங்கத்தில் வேறு எந்த சாதியினருக்கும் அனுமதி இல்லை. சங்கத்தில் எந்த இஸ்லாமியருக்கும் அனுமதி இல்லை, எந்த கிறிஸ்தவருக்கும் அனுமதி இல்லை. இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், அனைத்து மதங்களையும் பின்பற்றுபவர்களும் பாரத மாதாவின் மகன்களாக வரும்போது சங்கத்தில் இணைய பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள்.
எனவே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களும் சங்கத்திற்கு வரலாம், ஆனால் உங்கள் தனிப்பட்ட அடையாளங்களை வெளியே வைத்திட வேண்டும். நீங்கள் ஷாகாவிற்குள் வரும்போது, நீங்கள் பாரத மாதாவின் மகனாக, இந்த இந்து சமுதாயத்தின் உறுப்பினராக வருகிறீர்கள்" என்று பேசியுள்ளார்.
”மதம் கேட்பதில்லை”
மேலும், “சங்கம் தனது தினசரி ஷாகாக்களில் கலந்து கொள்ளும் எவரிடமும் மதம் அல்லது சாதியைக் கேட்பதில்லை. இஸ்லாமியர்கள் ஷாகாவிற்கு வருகிறார்கள், கிறிஸ்தவர்கள் ஷாகாவிற்கு வருகிறார்கள். வழக்கமாக இந்து சமூகம் என்று அழைக்கப்படும் மற்ற அனைத்து சாதியினரைப் போலவே, அவர்களும் ஷாகாவிற்கு வருகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களைக் கணக்கிடுவதில்லை, அவர்கள் யார் என்று நாங்கள் கேட்பதில்லை. நாம் அனைவரும் பாரத மாதாவின் மகன்கள். சங்கம் அப்படித்தான் செயல்படுகிறது ”என்று மோகன் பகவத் பேசியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏன் பதிவு செய்யப்படவில்லை?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பதிவு மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர்களின் விமர்சனங்களுக்கு மோகன் பகவத் பதிலளித்துள்ளார். அதன்படி, “ஆர்.எஸ்.எஸ். 1925-ல் நிறுவப்பட்டது, எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? சுதந்திரத்திற்குப் பிறகு, பதிவு கட்டாயமில்லை.
நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம். நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. வருமான வரித்துறையும் நீதிமன்றங்களும் ஆர்எஸ்எஸ்ஸை தனிநபர்களின் அமைப்பு என்று விவரித்துள்ளன. அதனால் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. நாங்கள் மூன்று முறை தடை செய்யப்பட்டோம். எனவே அரசாங்கம் எங்களை அங்கீகரித்துள்ளது. நாங்கள் அங்கு இல்லையென்றால், அவர்கள் யாரைத் தடை செய்தார்கள்?" என மோகன் பகவத் கேள்வி எழுப்பினார்.
ஆர்.எஸ்.எஸ் தேசியக் கொடியை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கையில், “நாங்கள் எப்போதும் எங்கள் மூவர்ணக் கொடியை மதிக்கிறோம், அஞ்சலி செலுத்துகிறோம், பாதுகாக்கிறோம். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் பாரம்பரியத்தில் குருவாகக் கருதப்படும் காவி நிறமும் குறியீட்டு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது” என்றும் மோகன் பகவத் பேசியுள்ளார்.