திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசும்போது, மத உணர்வுகளை தூண்டுபவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, இது தமிழ்நாடு. அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்ற தெளிவு கொண்டவர்கள் தமிழ் மக்கள். இதனை பா.ஜ.க. புரிந்து கொள்ள 100 ஆண்டுகளாகும். அவர்கள் யோசிக்க மாட்டார்கள், சிந்திக்கவும் மாட்டார்கள்.


இந்திக்கு எதிரி அல்ல


இந்தியை தமிழகத்தில் திணிப்பது, இந்தி மொழி பேசுபவர்களை தமிழகத்தில் நுழைப்பதன் மூலம் பா.ஜ.க.வை வளர்த்துவிடலாம் என சூழ்ச்சி செய்கிறார்கள். இந்திக்கு என்றைக்கும் தி.மு.க. எதிரி அல்ல. இந்தியை திணிக்கக் கூடாது என்றுதான் திமுக சொல்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், அந்த மாநில மக்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் இருக்கக்கூடாதா?


மாநில அரசு தேர்வுகளை மத்திய அரசின் பொதுத் தேர்வாக நடத்த வேண்டும் என சொல்வது அநியாயம். இதன்மூலம், வட மாநில மக்களை தமிழகத்தில் திணிக்க பார்க்கிறார்கள். 50 ஆண்டுகளாக பார்த்து பார்த்து பாதுகாக்கப்பட்ட தமிழகத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள். தலையை கொடுத்தாவது தமிழகத்தை தி.மு.க. மற்றும் எனது ஆட்சி பாதுகாக்கும். ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்துக்கு எதிராக நடைபெறும் செயல்களை தடுக்க முடியும். 




மோடி மஸ்தான் வேலை 


இதனை தேர்தல் என கருத வேண்டாம். நம்முடைய கொள்கையை காப்பாற்றவும் மற்றும் கட்டமைக்கப்பட்டுள்ள தமிழகத்தைக் காப்பாற்றவும் நடக்கும் போர். இந்த போரில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. துரோகம் செய்து வருகிறது. ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தபோது, இந்தியா வெளிநடப்பு செய்துள்ளது. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற அனைவரது கோரிக்கைகளையும் பா.ஜ.க. ஏற்காமல் அவமதித்துள்ளது. இதனை முதல்வர் கண்டிக்கவில்லை. பா.ஜ.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் நாம் பாடம் புகட்ட வேண்டும்.




தமிழ் மண்ணில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணித்து, மதவெறியை தூண்ட வேண்டும் என சிலர் திட்டமிட்டுள்ளனர். அவர்களது திட்டம் நிறைவேறாது. மோடி மஸ்தான் வேலையெல்லாம் தமிழகத்தில் பலிக்காது.
மாநில சுயாட்சிக்கு ஆபத்து வந்துள்ளது. இதனை தடுக்கும் தேர்தல்தான் நடைபெறுகிறது. இந்து என சொல்லிக் கொண்டு கோயில்களை மூட பா.ஜ.க. நினைக்கிறது. இந்துக்கு விரோதி என சொல்லப்படும் தி.மு.க., கோயில்களை திறக்க முயற்சிக்கிறது. 


இவ்வாறு அவர் பேசினார்.