தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காங்கேயத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசும்போது, ”முதல்வர் பழனிசாமி தோல்வி பயத்தில் உளற ஆரம்பித்திருக்கிறார். வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார். நேற்றைக்கு ஒரு கூட்டத்தில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு என்னையே பலியிடத் தயார் என்று பழனிசாமி பேசியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொள்கிற ஒரே பெரிய மனுஷன் பழனிசாமிதான். அது பாராட்டுக்குரியதுதான்.
திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு இல்லை. தி.மு.க.வை வீழ்த்தவும் முடியாது. அதை நினைத்துப் பார்க்கவும் முடியாது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு இதுவரை ஒருவன் பிறக்கவுமில்லை. இனியும் ஒருவன் பிறக்கவே முடியாது.
கருணாநிதிக்கு நான் மட்டும் மகன் அல்ல. இந்த இயக்கத்தின் ஒவ்வொரு உடன்பிறப்பும் அவருடைய பிள்ளைகள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அண்ணா காலத்திலிருந்து பல அயோக்கியர்கள் தி.மு.கவை வீழ்த்தப் போகிறோம் என்றார்கள். எனவே பழனிசாமியின் இந்த வசனத்தை 50 வருடங்களாக கேட்டுக்கேட்டு புளித்துவிட்டது.
மத்தியிலும் நம் ஆட்சி இல்லை. மாநிலத்திலும் ஆட்சி இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு கட்சியை வீழ்த்த இத்தனை பேர் கூடி இருக்கிறார்கள் என்றால் நம் சக்தி என்னவென்று பாருங்கள். கருணாநிதி இல்லை என்பதால் கட்சியை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்துவிட்டார்கள். தி.மு.க.வை வீழ்த்த உங்கள் உயிரைத் தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீண்ட காலம் வாழுங்கள். விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்று தி.மு.க. ஆளுகின்ற காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும். அதைத்தான் பழனிசாமிக்கு தெரிவிக்க விரும்புகிறேன்” என்று பேசியுள்ளார்.