தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், கடலூர் தொகுதியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.


இந்த நிலையில், வருமான வரித்துறையினர் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் வீட்டில் நேற்று மாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் முக்கிய பதவியை வகித்துவருபவரும், தனியார் பள்ளிகள் கூட்டமைப்ப மாநில செயலாளருமான இளங்கோவனுக்கு சொந்தமாக தருமபுரி மற்றும் ஓசூரில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. சென்னையிலும் அவருக்கு அலுவலகங்கள் உள்ளன.




இளங்கோவனின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் ரூபாய் 6 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், இன்று காலை வருமான வரித்துறையினர் கணக்கில் காட்டப்படாத மேலும் ரூ.3 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உறவினர் வீட்டில் 9 கோடி கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.