கேரளாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதில், அவர் பேசியதாவது, 

”இந்தியா விடுதலை அடைந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை அடைந்த அந்தக் கால கட்டத்தில் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் வீட்டில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தலைமறைவாக இருந்தார்கள். 1967ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்தின்போது தி.மு.க.வுடன் இருந்த கட்சிதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.


திராவிட இயக்கம் உருவாகாவிட்டால் நான் கம்யூனிஸ்ட கட்சியில் தான் இருந்திருப்பேன் என சொன்னவர் கலைஞர் கருணாநிதி. அதை அவர் மனப்பூர்வமாக சொன்னதன் அடையாளம் தான் எனக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டியது. சோவியத் நாட்டுக்கு சென்று வந்த பிறகே சுய மரியாதைக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.


நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தின் போர்வையில் செய்யப் பார்க்கிறார்கள். கவர்னர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பா.ஜ.க. நமது எண்ணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் எழுப்பினால் அதற்கு கூட பதில் கூறப்படுவதில்லை.


 






உரிமைகளை நிலைநாட்ட கடிதம் அனுப்பினால் அதற்கான பதில் கூட ஒன்றிய அரசிடமிருந்து வருவதில்லை. மாநில அரசுகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதைத் தடுக்க நான் எழுப்பும் முழக்கம் அரசியல் முழுக்கம் மட்டுமல்ல, மாநிலங்களைக் காப்பாற்ற வேண்டிய முழுக்கமாகவும் அமைந்துள்ளது.


தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்காக மட்டும் நாங்கள் பேசவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்காகவும் நாங்கள் பேசுகிறோம், அவையும் ஆபத்தில் உள்ளன.






ஒரே நாடு, ஒரு தேர்தல், ஒரு உணவு, ஒரு தேர்வு, ஒரு மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம். இப்படி எல்லாவற்றையும் ஒரே ஒரே என்று கோரஸ் பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்றாகிவிடும், ஒரே கட்சி என்பது ஒரே ஆள் என்று ஆகிவிடும்.


இதை விட ஆபத்து வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல் தான் ”மாநிலத்தில் சுயாட்சியும் மத்தியில் கூட்டாட்சியும்” எனப் பேசியுள்ளார்