தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையை திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரித்து வருகின்றனர். மேலும், இந்தி திணிப்பிற்கு கடும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement

தாய்மொழிகளை விழுங்கிய இந்தி:

இந்த நிலையில், இந்தி எதிர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் அன்பார்ந்த வெளிமாநில சகோதர மற்றும் சகோதரிகளே, எத்தனை இந்திய மொழிகளை இந்தி விழுங்கியிருக்கிறது தெரியுமா? 

போஜ்புரி,மைதிலி,அவதி, ப்ரஜ்,பண்டேலி,கர்வாலி,குமோனி,மகாகி, மர்வாரி,மால்வி,சத்தீஸ்கரி,சந்தலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்த்தா, குர்மலி, குர்க்,முண்டரி மேலும் பல மொழிகளை போராடிக் கொண்டிருக்கிறது. இந்தி மொழிக்கான உந்துதல் பண்டைய தாய்மொழிகளை கொல்லும். பீகாரும், உத்தரபிரதேசமும் ஒருபோதும் இந்தி மையப்பகுதிகளாக இருந்ததில்லை. அவர்களது உண்மையான மொழிகள் தற்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்களாகி விட்டது. இது எங்கு முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால்தான் தமிழ்நாடு இதை எதிர்க்கிறது. 

Continues below advertisement

தமிழ் விழித்தது, பிழைத்தது:

தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிவாரண நிதிகளை விடுவிக்காமல் தாமதித்து வருகிறது. 

இதனால் மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் கண்டனம் குவிந்து வருகிறது. இந்த விவகாரத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள நிதியை தமிழ்நாட்டிற்குத் தர வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது.