சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமை கழக பதவிகளுக்கு புதிய நியமனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தலைவராக மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


 






பின்னர், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், "தி.மு.க. பழுத்த மரமாக இருப்பதால்தான் கல் எறிகிறார்கள். தி.மு.க. கல்கோட்டை. வீசப்படும் கற்களை வைத்து கோட்டை கட்டுகிறோம். தி.மு.க. தலைவராக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. தமிழர்களின் சுயமரியாதையையும் தமிழ்நாட்டின் நலனையும் காக்கிற தி.மு.க.வின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். 


தி.மு.க. தோன்றிய காலத்தில் இருந்த அதே சுறுசுறுப்பில் இன்னும் இருக்கிறோம். 3 ஆண்டுகளாக தி.மு.க.வுக்கு முன்னேற்றமான காலம். நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் வென்றிருக்கிறோம். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தி.மு.க. நிர்வாக பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தி வருகிறோம். தி.மு.க.வில் பதவிகளுக்கு போட்டு போடுகிறார்கள் என்றால் உழைப்பதற்காக என்று அர்த்தம். திமுக உட்கட்சி ஜனநாயகத்துடன் இயங்கி வருகிறது. 


ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும் ஒருவருக்கு ஒருவர் தட்டிக்கொடுத்தும் திமுகவில் நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். தி.மு.க.வில் வாய்ப்பை பெற முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம். தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.


உள்கட்சி தேர்தலில் மோதல் வெடிக்கும் அதை எழுதலாம் என நினைத்த பாரம்பரிய பத்திரிகைகளின் ஆசையில் மண் விழுந்தது. தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்று இப்போது சொல்கிறார்கள். சொந்த விருப்பு வெறுப்போடு செயல்படுவது கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். தி.மு.க. நிர்வாகிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். தொடர்ச்சியாக பல கூட்டங்களை தி.மு.க. நிர்வாகிகள் நடத்த வேண்டும். 


தி.மு.க. நிர்வாகிகளின் செயல்பாடுகள் கட்சிக்கும் அவர்களுக்கும் பெருமை தரக்கூடியவையாக இருக்க வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய சொற்கள் மிக மிக முக்கியமானது. ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். தி.மு.க.வினர் பேசியதை ஒட்டியும் வெட்டியும் பரப்புவார்கள் 


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பா.ஜ.க. எந்த கீழ்த்தரமான செயலையும் செய்யும். அதிமுக கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குளிர்காய பார்க்கிறது பாஜக. திமுகவை எதிர்ப்பதை தவிர அதிமுகவுக்கு வேறு எந்த கொள்கையும் இல்லை. அதிமுக 4 பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. அதிமுக சரிந்தும் சிதைந்தும் கிடக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கும் சொல்லிக்கொள்ள எந்த பெருமையும் இல்லாததால் நம்மை அவமதிக்க பார்ப்பார்கள்" என்றார்.