சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூக நீதி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, "சமூக நீதி நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கும் தேவையாக இருக்கிறது. டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் செயல்பட இந்தியாவும் தயாராக இருக்கிறது. கல்வித்தந்தையாக காமராஜர் இருந்தார். தமிழ்நாட்டில் சமூகநீதி போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கி வைத்தார். சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். இந்தியாவிற்கான சமூகநீதிப் போராளியாக டாக்டர் ராமதாஸ் உள்ளார். தமிழ்நாட்டில் முதல்முதலில் மதுக்கடையை மூடியவர் ராஜாஜி. பூரண மதுவிலக்கினை சேலம் மாவட்டத்தில் தான் முதலில் கொண்டு வந்தார். தொடர்ச்சியாக மூடிதான் இருந்தது. தமிழ்நாட்டில் மீண்டும் மதுக்கடையை திறந்தவர் கருணாநிதி. திமுக என்றால் விஞ்ஞான ஊழல்தான் ஞாபகம் வருகிறது.


இளைஞர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்


தமிழகத்தில் 57 ஆண்டுகள் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சினிமா, விளையாட்டுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். வெறுமனே பார்வர்டு செய்திகளை மட்டுமே புரிந்து கொண்டுள்ளனர். இளைஞர்கள் விழிப்புணர்வாக இருந்தால் தமிழ்நாட்டில் மாற்றம் வந்திருக்கும். சமூக நீதி என்றால் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக ஜாதியின் அடிப்படையில் பல வேற்றுமைகளை முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக முன்னேறாத சமூகங்கள், முன்னேற வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதில் இட ஒதுக்கீடு முக்கிய பங்கு வகிக்கிறது. அடிப்படை வசதிகள், கல்வி என ஒவ்வொரு வசதியும் எல்லோருக்கும் கிடைப்பதுதான் சமூக நீதி. தமிழ்நாடு சமூக நீதி அடிப்படையில் முன்னேறவில்லை. வெறும் விளம்பரத்தில் மட்டும்தான் இருக்கிறது.



இந்தியாவில் முதல்முதலில் 1921-ல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி இடஒதுக்கீட்டினை கொண்டுவந்தது. தமிழ்நாட்டில் இன்று சமூகநீதியில் பெரும்பங்கு இடஒதுக்கீடு உள்ளது. அதிலும் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. தற்போது 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்திருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஒராண்டிற்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி 2010-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியை, டாக்டர் ராமதாஸ் சந்தித்து வலியுறுத்தினார். அடுத்த வந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. பல்வேறு குழு அமைத்து அறிக்கை அளித்த பின்னரும் இந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.


மராத்தா இட ஒதுக்கீடு வழக்கிற்கு பிறகு தமிழ்நாட்டை கவனிப்போம் என உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொள்ளக்கூடிய சூழலில், கணக்கெடுப்பு நடத்தாதால் 69 இடஒதுக்கீடு ரத்தாகும் நிலை உள்ளது. இந்த நிலை ஏற்பட்டால் யாருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்காது. இதற்காகத்தான் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். முதலில் ஒத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், இப்போது மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டமன்றத்தில் பொய் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய மோசடி. 



இந்திய புள்ளியியல் விவர சட்டப்படி, சாதி வாரி கணக்கெடுப்பு யார் வேண்டுமானாலும் நடத்தலாம். மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட ஆட்சியர், ஊராட்சி தலைவர் நடத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு ஊராட்சி தலைவர் நடத்திட முடியும். பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு இந்த சட்டத்தின் கீழே நடத்தப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகா நடத்தி முடித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட் மாநிலங்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி கொண்டுள்ளன.


ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் முதலமைச்சர் என்ன பிரச்சினை இருக்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டினை நீதிமன்றம் ரத்து செய்தால் மிகப் பெரிய மக்கள் சீற்றம் வரும். அன்றைய தினமே திமுக ஆட்சி கவிழும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும். இட ஒதுக்கீடு போராட்டங்களில் எத்தனை உயிரை பலிகொடுத்து பெற்றுள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய அறியாமைக்காக மக்களை முதல்வர் பலியிடக் கூடாது. முதல்வரை சுற்றி இருக்கும் அமைச்சர்களுக்கு சமூக நீதி என்றால் என்ன என்றே தெரியாது. அவர்களை சமூக நீதி குறித்து தவறான தகவல்களை முதல்வரிடம் கூறுகிறார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உரிமை உள்ளது தெரியவந்துள்ளது. மக்களை ஏமாற்றும் திமுகவினர் சமூக நீதி என்று பேசும் தகுதியை இழந்து விட்டனர்" என்று கூறினார்.