கரூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது எனது வாழ் நாள் கனவு - மேட் இன் இந்தியா, மேட் இன் ஜப்பான் என்று கூறுவது போல "மேட் இன் கரூர்" என்ற அளவிற்கு கரூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
கரூரில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்கம், அனைத்து வணிகா்கள் சங்கம் சாா்பில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில் 2030 விஷன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் மாரத்தான் போட்டி மற்றும் அதிவேக நடை போட்டி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர், வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் கலையரங்கத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள 73 தொழிற்சங்க கூட்டமைப்புகளுடன் கருத்து கூட்டம் நடைபெற்றது.
கரூர் விஷன் 2030 என்ற அடிப்படையில் கரூர் டெக்ஸ்டைல்ஸ் அசோசியேசன் மூலமாக ரூ.25 ஆயிரம் கோடியும், மற்ற தொழிற்சங்கங்கள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகத்தை ஈட்டும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தொழிற்சங்கங்களின் வளர்ச்சி பாதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தேவையான கருத்துக்கள் மற்றும் திட்டமிடல் கூட்டம் நடத்தப்பட்டது.
விழாவில், கலந்து கொண்ட மின்சாரத்துரை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்-
கரூர் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2030 ல் வர்த்தக இலக்கு 50 ஆயிரம் கோடி என வளர்ச்சி பாதையை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளனர். இது, தொழிற்சங்கங்களின் வளர்ச்சி என்பதை விட மாவட்டத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டமாகும். தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று அவற்றை நிறைவேற்றித்தர உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையான வரி குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று, அதிகாரிகளுடன் பேசி குறைக்க ஏற்பாடு செய்யப்படும். கரூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது எனது வாழ் நாள் கனவு. தொழில் வளர்ச்சி மற்றும் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக கரூரில் விரைவில் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் கரூரில் விமான நிலையம் அமைய ஏற்பாடு செய்யப்படும்.
கடந்த 3 ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு 3000 கோடியில் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் வழங்கி உள்ளார். கருரில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் மினி டைட்டல் பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கரூர் தொகுதிக்குள் கரூர் மாநகராட்சி பகுதியில் மினி டைட்டல் பார்க் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
தொழில் வளர்ச்சியில் திருப்பூரை விட முன்னேற்றம் அடைய வேண்டும். மேட் இன் இன் இந்தியா, மேட் இன் ஜப்பான் என்று கூறுவது போல மேட் இன் கரூர் என்ற அளவிற்கு கரூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உயர்த்தி கொண்டு செல்ல வேண்டும். தொழில் வளர்ச்சி கரூரின் அடையாளமாக இருக்க வேண்டும். கரூரில், ட்ரேடிங் மையம் (வர்த்தக மையம்) அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று, அதற்கான நிதி பெற்று விரைவில் இடம் தேர்வு செய்து, வர்த்தக மையம் அமைக்கப்படும் என்றார்.