கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும், திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளையும் வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "முதலமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்ற இரண்டு ஆண்டுகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, நகைக்கடன் தள்ளுபடி, புதுமைப்பெண், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.


கோவை மெட்ரோ‌ ரயில் திட்டம் 9 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இளைஞர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க கோவைக்கு ஐடி பார்க்  தந்து, கோவை வரலாற்றில் முதலமைச்சர் பெருமை சேர்த்துள்ளார். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த எழில்மிகு கோவை திட்டம், செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டங்களை தந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகளை பெற்று கொடுத்தோம் என்ற நிலைமையை உருவாக்க வேண்டும். கோவை திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அர்ப்பணிப்பு உடன் பணியாற்ற வேண்டும். கவுன்சிலரோ, சட்டமன்ற உறுப்பினரோ தனக்கு அதிக ஓட்டுகள் போட்டவர்களுக்கு தான் அதிக திட்டங்களை செயல்படுத்துவார்கள். 234 தொகுதிகளையும் தனது தொகுதியாக கருதி முதலமைச்சர் சமமான வளர்ச்சி திட்டங்களை வழங்குகிறார். இதற்கு நன்றியை செயல் வடிவத்தில் தெரிவிக்கும் வகையில் மகத்தான வெற்றியை முதலமைச்சருக்கு வழங்கிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.




இதற்கு முன்னதாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நூற்றுக்கணக்கான மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “ரொம்ப இறுக்கமாக மாணவிகள் உள்ளனர். நல்ல நாள் சந்தோஷமாக இருங்கள். அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் 452 மாணவிகள்  புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.


தமிழ்நாட்டின் நிதி நிலை ரொம்ப மோசமாக  இருந்தது. அப்பொழுதும் தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் நினைத்தார்.  கல்வியிலும் சரி, பொது வாழ்விலும் சரி வாழ்ந்து காட்டியவர் அவினாசிலிங்கம். 8500 பேர் ஒரு கல்வி நிறுவனத்தில் பயில்கின்றார். சிறப்பாக கல்வியினை அளித்து வருகின்றனர். கல்வி நிறுவனம் அமைந்துள்ள சாலைக்கு அவிநாசிலிங்கம் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பள்ளி கல்வித்துறை வரலாற்றில் இந்த ஆண்டு தான் கல்விக்கு அதிக தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி , பள்ளி கல்வித்துறை என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன. 7 ஆயிரம் கோடி மகளிர் உரிமை தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி, வேளாண்மை போன்றவற்றிற்கும் அதிக அளவில் இந்த முறை நிதிநிலை அறிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.