தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்தவருமான  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.


 


கருணாநிதியை புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங்: விழாவில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். இந்தியாவின் டைட்டன் போன்றவர் கருணாநிதி என்றும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணிக்காத்தவர் என்றும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், "1973க்கு முன்னர் வரை சுதந்திர தினத்தில் ஆளுநர் தான் கொடியேற்றுவார்கள். முதலமைச்சர் தான் கொடியேற்ற வேண்டுமென குரல் கொடுத்தவர் கருணாநிதி. அவர் குரலுக்கு செவிமடுக்கப்பட்டது. 1974ல் அவர் முதலமைச்சராக கொடியேற்றினார்.


இந்திய வரைபடத்தை வடிவமைப்பதில் அவரது பங்கு அளப்பரியது. உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதி. கலைஞரின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவரது உழைப்பும், திட்டங்களும் என்றென்றும் நினைவுகூறத்தக்கவை.


"வரலாற்றில் அழிக்க முடியாத சாதனைகளை படைத்தவர்"


வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணிக்காத்தவர். ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவத்திற்காக அரும்பாடுபட்டவர். இந்திய ஒற்றுமைக்கு ஊறு ஏற்படாமல் பாதுகாத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. வரலாற்றில் அழிக்க முடியாத சாதனைகளை படைத்தவர்.


பல பிராந்திய கட்சிகள் மறைந்தாலும் இன்று வரை திமுக பலமாக இருக்க வித்திட்டவர் கருணாநிதி. தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் முனைப்பு காட்டியவர். கலாசார அடையாளத்திற்கு முக்கியத்துவம் அளித்தவர்" என்றார்.


விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "பாதுகாப்பு துறை அமைச்சர் நாணயத்தை வெளியிட்டது மிக மிக பொருத்தமானது தான். கடந்த ஓராண்டாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம், மகளிர் உரிமைத்தொகை, மதுரை கலைஞர் நூலகம், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அவர் உருவாக்கிய கட்டமைப்புகளை, திட்டங்களை பட்டியலிட்டு சொன்னால் ஒருநாள் போதாது.


கலைஞரின் நாணயத்தை வெளியிட ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்த நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ராஜ்நாத் சிங் அவர்களை தான் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டுமென என் மனதில் நினைத்திருந்தேன்" என்றார்.