மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி, டங்ஸ்டன் கனிமம் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து. முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலூர் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதில், பல்வேறு விவசாய சங்கத்தினர், வணிக சங்கத்தினர், வழக்கறிஞர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், மற்றும் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகவும், டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு டங்ஸ்டன் எடுக்க அனுமதி வழங்ககூடாது. இதுகுறித்து சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். முல்லை பெரியாறு ஒருபோக பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக, பல்வேறு வரலாற்று மற்றும் தொல்லியல் சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் பி.மூர்த்தி
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் கலந்துக் கொண்ட நிலையில், கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி...” தமிழகத்தை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்திற்கும், தமிழக அரசு அனுமதி வழங்காது. டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டங்ஸ்டன் எடுக்கவோ, மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு ஆய்வுக்கும் தமிழக அரசு அனுமதி கொடுக்காது. மாவட்டத்தில் டங்ஸ்டன் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்காது, இதுகுறித்த சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு தீர்மானம் கொண்டுவரப்படும். மக்களுக்கு என்றும் தமிழக அரசு துணை நிற்கும் என்று தெரிவித்ததுடன். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூட்டத்தில் அப்போது வேண்டுகோள் விடுத்தார். இதனைத்தொடர்ந்து, பேசிய மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், இது குறித்து கட்சி பாகுபாடின்றி தமிழக அரசு சிறப்பு கூட்டத்தை கூட்டி, தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.