சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதில் அளிக்கும் போது சிரித்துக்கொண்டே மதுரை எம்.பியை கேளுங்க என அவர் குறித்து ஒருமையில் பேசியது சர்ச்சையாக மாறியது.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது நிறைவு பெறும் என்ற செய்தியாளர் கேள்விக்கு ?
மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் கட்டடப் பணிகள் 99 % நிறைவடைந்து விட்டது., விரைவில் பணிகள் முடிவுற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து தொடர் மழை காரணமாக நகர் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா.? என்ற கேள்விக்கு
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை இருப்பதாலும்., சாலைகள் புதுபிக்கும் பணி நடைபெறவில்லை எனவும்., மதுரையில் மட்டும் 328 இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவி நேரடி தேர்வா.? அல்லது மறைமுக தேர்வா.? என்ற செய்தியாளர் கேள்விக்கு.?
அது அரசாங்கம் முடிவு செய்து தேர்தல் அறிவித்த பின் தெரியவரும் என்றார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமானநிலைய விரிவாக்கப்பணிகள் நிறைவடையாமல் உள்ளதே ?
சம்மந்தப்பட்ட ஆட்களிடம் கேட்காமல் என்னிடம் கேட்கின்றீர்கள், வெங்கடேசன் என்ற ஒரு ஆளு இருக்கான் அந்த ஆளிடம் கேளுங்க, எம்.பி இடம் கேளுங்கள்” என கூறி நகைத்தார்.
இந்நிலையில் கே.என்.நேரு ஒருமையில் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை பொதுவெளியில் இதுபோல் பேசுவது பெரும் கண்டனத்துக்குரியது எனவே தமிழக முதல்வர் பிரச்னையில் தலையிட வேண்டும். மேலும் இப்பேச்சு கண்டனத்துக்கூரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன் அறிக்கை ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க என்று சு. வெங்கடேசனிடம் அமைச்சர் கே.என்.நேரு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில்,
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்