திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். பின்னர் கூட்டம் முடிந்தபின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பத்திரிகையாளரார்களுக்கு பேட்டியளித்தார். அதில், “ஆய்வுக்கூட்டத்தில் மூன்று மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கோரிக்கையாக தெரிவித்துள்ளனர். அதில் எதை செய்யமுடியும் என்பதை நாங்கள் குறிப்பெடுத்துள்ளோம். அது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகளில் எதை நிறைவேற்ற முடியும் என்பதை எனது கவனத்துக்கு கொண்டு வருவார்கள். நான் அதை அமைச்சர் எ.வ.வேலு கவனத்துக்கு அனுப்ப உள்ளேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.


 




திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேருக்கு பட்டா மற்றும் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 6 ஆயிரத்து 400 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. சான்றிதழ் வழங்க நீண்டகாலம் எடுப்பதாக வருவாய்த்துறை மீது குற்றச்சாட்டு இருந்தது. அதை மாற்றி யாராக இருந்தாலும் 15 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நிலுவை மனுக்கள் குறைந்துள்ளது. மனு குறித்து விசாரணை நடத்தி தகுதியுடையவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டா தொடர்பாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் பெறப்படும் மனுக்களை தள்ளுபடி செய்யாமல், தகுதியிருக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 




மக்களுக்கு சாதிச்சான்று குறித்த பிரச்சினைகள் கவனதுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிசி சான்றிதழ் வழங்குவதில் வருமான சான்றிதழ் பெறும் நடவடிக்கையில் குளறுபடி இருப்பதாக எழும் புகார் குறித்து விசாரிக்கப்படும். பட்டா குறித்த சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெறும் வெற்றி சாதாரண வெற்றியாக இருக்காது. மிகப்பெரிய வெற்றியாக அமையும். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் அளவுக்கு வெற்றி பெறுவோம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பின்னர் கருணை அடிப்படையில் 4 நபருக்கு பணிநியமன ஆணையை அமைச்சர்கள் ராமச்சந்திரன், எ.வ.வேலு ஆகியோர் வழங்கினர். பேட்டியின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை‌ , மாவட்ட ஆட்சியர் முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.