தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோதல்களை தவிர்ப்பவரே தவிர மோதல்களுக்கு தயாராக இருப்பவர் அல்ல என முரசொலி நாளேடு கருத்து தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான கருத்து வேறுபாடுகளை சிலர் ஊதி பெரிதாக்கி அரசு நிர்வாகத்தில் பதற்றத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றது மூலம் தவிடு பொடியாகிவிட்டது என்றும் முரசொலி தெரிவித்துள்ளது.


’இடைவெளியை அதிகரிக்க விரும்பாத ஆளுநரும் முதல்வரும்’


ஆளுநருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் இடைவெளியை அதிகரிக்க ஆளுநரும் இடம் கொடுக்கவில்லை, முதல்வரும் இடம் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள முரசொலி நாளேடு, தேநீர் விருந்திற்கான அழைப்பிதழில் ’தமிழ்நாடு’ என்ற அரசமைப்பு சட்ட ரீதியிலான பெயரை பதிவு செய்தததுடன், தொலைபேசியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசி அழைப்பு விடுத்தார் என்றும் பதிவு செய்துள்ளது.


’மெல்லுவதற்கு எதுவும் கிடைக்கவில்லையென ஏமாற்றம்’


இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் மற்ற எல்லா பிரச்னைகளிலும் கையாளும் பெருந்தன்மையுடன் கூடிய மென்மையான அணுகுமுறையினையே குடியரசு நாளையொட்டிய நிகழ்வுகளிலும் பின்பற்றினார் என்றும் அதனால் அவர் பிரச்னையை பெரிதாக்க விரும்பாமல், அதற்கு காரண கர்த்தாக்களை பற்றி அலட்டிக்கொள்ளாமல், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட்டுள்ளார் என்றும் முரசொலி தெரிவித்துள்ளது.


இதனால், குடியரசு நாளில் மெல்லுவதற்கு எதேனும் கிடைக்காத என ஏங்கிக் கிடந்தவர்கள் ஏமாந்து போனார்கள் எனவும் முரசொலி நாளேடு பதிலடி கொடுத்துள்ளது.


கருத்து வேறுபாடு வந்தது ஏன் ?


 ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய சர்ச்சையான பேச்சுக்களால் திமுகவும் தமிழ்நாடு அரசும் அதிருப்தியில் இருந்தன. குறிப்பாக, சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து சென்று பணியாற்றியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று குறிப்பிடுவதை காட்டிலும் நம் மாநிலத்தை தமிழகம் என்று சொல்வதே பொறுத்தமானதாக இருக்கும் என்றும், திராவிட இயக்கங்கள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்ற தொனியிலும் பேசியிருந்தார். இதற்கு திமுக கடுமையான எதிர்வினையை ஆற்றியிருந்தது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக மாநிலத் தலைவர் ஆகிவிட்டு இப்படியெல்லாம் பேசட்டும் என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.


 கூடிய பேரவை ; வெளியேறிய ஆளுநர்


 இந்நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கடந்த 9ஆம் தேதி கூடியது. அதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள திராவிட மாடல், தமிழ்நாடு, பெரியார், கலைஞர் உள்ளிட்ட வார்த்தைகளை படிக்காமலும் சுவாமி விவேகானந்தர் போன்ற வார்த்தைகளை தன்னிச்சையாக சேர்த்தும் படித்தார். இதனையடுத்து பேரவையிலேயே தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் சேர்த்தும், விடுத்தும் படித்த உரையை அவைக் குறிப்பில் ஏற்றக் கூடாது என்றும், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே குறிப்பில் ஏற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, சபாநாயகர் அப்பாவு பேரவை விதி 17ஐ தளர்த்தி தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரை மட்டுமே அவையில் இடம்பெறும் என்றும் ஆளுநர் பேசியது இடம்பெறாது எனவும் அறிவித்தார்.


இதனால், ஆத்திரமடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பேரவை முடிவதற்கு முன்னரே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் வரை சென்று தமிழ்நாடு அரசு புகார் அளித்திருக்கும் நிலையில், குடியரசுத் தின விழாவிலும் ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்திலும் முதல்வரும் ஆளுநரும் ஒன்றாக பங்கேற்றது முக்கியத்துவம் பெறுவதாக அமைந்தது.


ஆளுநருக்கும் – தமிழ்நாடு அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு விலகி, சமாதானம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.