கடந்த மூன்று ஆண்டுகளில் 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களை பதிவு செய்து திமுகவின் திராவிட மாடல் அரசு சாதனை செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை வெளியிட்ட அமைச்சர்


இது குறித்து அறிக்கை வெளியிட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசன், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமையும்போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகளையும் வாழ்நிலையையும் உயர்த்துவதில் தனித் கவனம் செலுத்தி செயலாற்றி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.


தொழிலாளர் நல வாரியத்திற்கு காரணம் யார்?


தமிழ்நாட்டின் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி பொறுப்பேற்ற பிறகுதான், தனியாக தொழிலாளர் நலத்துறை உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ள அமைச்சர் சிவி கணேசன், கலைஞர் கருணாநிதி தொழிலாளர்களுக்காக செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்கள் போல, முதல்வர் மு.க.ஸ்டாலினும், திராவிட மாடல் ஆட்சி மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து வருகிறது.


18,81,079 உறுப்பினர்கள்


அந்த வகையில், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கடந்த மூன்றரை ஆண்டுகளில், 20 அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களில், 18,81,079 புதிய உறுப்பினர்களை பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழில்லாளர் வாரியங்களில் பதிவுப் பெற்றுள்ள 25,35,546 உறுப்பினர்களுக்கு 2,106 கோடி ரூபாய் வரையிலான நலத் திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என அமைச்சர் சிவி கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிய அரசு


மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாரிய உறுப்பினர்களின் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 200 ரூபாயாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்கியுள்ளார் என்றும் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக சிரத்தையுடன் செயலாற்றி கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு, அவர்களின் உரிமைகளை காப்பதிலும் உறுதியாக இருப்பதாக அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார்.