தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் 10,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது தமிழக காவல்துறையினருடன் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து இன்று காலை ரயில் மூலமாக ஆயுதம் ஏந்திய 7 கம்பெனி துணை ராணுவப்படையினர் இன்று சென்னை வந்தடைந்தனர்.




அவர்கள் அனைவரும் பேருந்து மூலமாக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து பேருந்து மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் 65 துணை ராணுவ கம்பெனி படையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 235 துணை ராணுவ கம்பெனி படையினர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.