தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்


தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் 4 முதல் 5 மாத காலமே இருப்பதால் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் அணியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. எனவே தேர்தல் நெருங்க, நெருங்க முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு பல்டி அடித்து வருகிறார்கள். தற்போது அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்த மனோஜ் பாண்டியன் உட்கட்சி மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து செயல்பட்டு வந்தார். மீண்டும் அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இதன் காரணமாக ஆளுங்கட்சியான திமுகவிற்கு தாவியுள்ளார் மனோஜ் பாண்டியன். 

Continues below advertisement


இந்த நிலையில் மதிமுகவை சேர்ந்த மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மதிமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா மதிமுவில் இருந்து நீக்கப்பட்டதால் அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்க்குள்ளாகியிருக்கும் நிலையில் தற்போது மதிமுக மாணவர் அணி துணைச் செயலாளர் சிவநாதன் தன்னை அதிமுவில் இணைத்துக்கொண்டுள்ளார். 


அதிமுகவில் இணைந்த மதிமுக நிர்வாகி


இது தொடர்பாக அதிமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (9.11.2025 - ஞாயிற்றுக் கிழமை), ம.தி.மு.க-வைச் சேர்ந்த மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் P. சிவநாதன் நேரில் சந்தித்து தன்னைக் கழகத்தில் இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான K.C. கருப்பணன், MLA., பெருந்துறை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அருள்ஜோதி K. செல்வராஜ் ஆகியோரும் உடனிருந்தனர் என அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.