மயிலாடுதுறை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை எனக் கூறுவது அயோக்கியத்தனம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மயிலாடுதுறையில் நடந்த ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணப்’ பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
மக்கள் உரிமை மீட்புப் பயணம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். முன்னதாக நேற்று முன்தினம் சீர்காழியில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், நேற்று இரவு மயிலாடுதுறையில் கால்டெக்ஸ் பகுதியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டார். ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து சின்னக்கடைத் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
‘திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி’
தனது உரையின் தொடக்கத்தில், “கடந்த மூன்று தேர்தல்களில் திமுகவிற்கு மக்கள் வெற்றியைத் தந்தீர்கள். ஆனால், அதற்கு மாற்றாக திமுக மக்களுக்குத் துரோகத்தையும், பொய்களையும் மட்டுமே வழங்கியுள்ளது” என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். “முதலமைச்சருக்கும் டாஸ்மாக், கஞ்சா, போதைப் பொருட்கள், மணல் கொள்ளை என அனைத்துக்கும் தொடர்பு உண்டு” என்று அவர் சாடினார். “தற்போது விதவிதமான போதைப் பொருட்கள் சந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இது இளைஞர்களின் எதிர்காலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
இளைஞர்களால் ஆட்சி மாற்றம்
நேபாளம் மற்றும் இலங்கையில் இளைஞர்களின் எழுச்சியால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததைக் குறிப்பிட்ட அன்புமணி, “அதேபோன்று, அமைதியான முறையில் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் இளைஞர்களால் நிகழும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விவசாயிகளின் நிலை
விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்துப் பேசிய அவர், “நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.60 வரை லஞ்சம் கேட்கிறார்கள். ஒரு குவிண்டால் நெல்லுக்கு அரசு ரூ.2500 விலை நிர்ணயம் செய்திருந்தாலும், விவசாயிக்கு ஒரு குவிண்டால் உற்பத்தி செய்ய ரூ.2450 செலவாகிறது. மீதி ரூ.275 வரை விவசாயிகளிடம் கொள்ளையடிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
“திமுக அரசு பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என்ற மிகப் பெரிய திட்டத்தைக் கொண்டு வர நினைத்தது. அதனை நான் தனியாக நின்று எதிர்த்து ரத்து செய்தேன். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று போராடி வென்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார். காவிரி நீர் பிரச்னை குறித்துப் பேசிய அவர், “கர்நாடகா அரசு பாசனத் திட்டத்திற்காக ரூ. 70,000 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், திமுக அரசு எந்தப் பாசனத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. காவிரி உரிமைகளை முதல்வர் ஸ்டாலினும், அவரது தந்தை கலைஞரும் இழந்திருக்கிறார்கள். 1967-ல் இருந்து இதுவரை தமிழ்நாட்டில் 40 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மாறிவிட்டன” என்று குறிப்பிட்டார்.
மணல் கொள்ளை மற்றும் தடுப்பணை
கொள்ளிடம் ஆற்றில் தற்போது உவர்நீர் வருவதற்குக் காரணம், 70 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்படாததுதான் எனச் சுட்டிக்காட்டிய அவர், “மணல் கொள்ளையில் ஈடுபட முடியாது என்பதற்காகவே தடுப்பணை கட்ட திமுக அரசு மறுக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
சமூக நீதி மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு
“சமூக நீதிக்காக தமிழக முதலமைச்சர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவிற்கும் சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என தமிழக முதல்வர் கூறுவது அயோக்கியத்தனம். 90 ஆண்டுகளுக்கு முன்புதான் கடைசியாகத் தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது” என்று விமர்சித்தார். “தேர்தலில் வீடு வீடாக எவ்வளவு காசு கொடுக்க வேண்டும் என்று கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களே! அதுபோன்று சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். மேலும், “சமூக நீதி துரோகி ஸ்டாலின்” என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
‘திமுக மக்கள் விரோத கட்சி’
“தோல்வியடைந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வரலாமா? அவர்கள் அளித்த 48 வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அன்புமணி விமர்சித்தார். அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டை விடப் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள ஏழு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இதனை அமல்படுத்தவில்லை” என்றார்.
“தினமும் காலை 2 மணி நேரம் சூட்டிங் வருவதுதான் தமிழ்நாட்டின் நிர்வாகம் மற்றும் தலையெழுத்து” என்று கூறி, இதனை மக்கள் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “விவசாயிகளின் நேரடியான எதிரி ஸ்டாலின்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். இந்த உரை, மயிலாடுதுறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.