மயிலாடுதுறை: முன்னாள் கைதி பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், அது இன்னும் விசாரணையில்தான் உள்ளது என்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் தமிழகத்தின் நலனை எந்தக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் விரிவான விளக்கங்களை அளித்தார்.

"நீதிமன்றத்தில் மனு விசாரணையில் தான் உள்ளது"

செய்தியாளர்கள் சந்திப்பில் பேரறிவாளன் வழக்கு குறித்து எம்பி ஆர்.சுதா கூறியதாவது:

Continues below advertisement

"பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை; உண்மைக்கு புறம்பானவை. இந்த வழக்கில் சிபிஐ (CBI) விசாரணை தேவையா இல்லையா என்பது குறித்த இடைக்கால மனு மட்டும்தான் அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று மட்டும்தான் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாறாக, முதன்மை மனு தள்ளுபடி செய்யப்படவில்லை."

மேலும் இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து விளக்கிய அவர், "சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது, தொடர்ந்து விசாரணையில் தான் நீடிக்கிறது. இந்த விவகாரம் குறித்து மிக விரிவாக விசாரணை நடத்துவேன் என்று நீதியரசர் தெளிவாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த மனு குறித்து பேரறிவாளன், இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் (Bar Council of Tamil Nadu) ஆகியோர் உரிய பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்" என்று குறிப்பிட்டார்.

"தமிழக வளங்களை பாழ்படுத்த விடமாட்டோம்"

அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலில் நான்கு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா

"தமிழகத்தின் இயற்கை வளங்களையும், வாழ்வாதாரத்தையும் பாழ்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் எந்தவொரு கடுமையான நிலைப்பாடு எடுக்கப்பட்டதோ, அதே நிலைப்பாட்டில் தான் தற்போதும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காவிரி டெல்டா பகுதி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் விவசாயத்தையும், கடல் வளத்தையும் அழிக்கும் இத்தகைய திட்டங்களை எந்தக் காரணம் கொண்டும் தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.

மேகதாது விவகாரம்: "எந்த எல்லைக்கும் சென்று போராடுவோம்"

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிப்பது குறித்தும், அதற்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

"மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்துத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார். ஆனால், பாரதப் பிரதமர் எப்பொழுதுமே தமிழகத்தின் நலனுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணைப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளையும், நம் மாநில விவசாயிகளின் நலன்களையும் காப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக, தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், தண்ணீருக்காகவும் தேவைப்பட்டால் எந்த எல்லைக்கும் சென்று போராட்டத்தில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா   தெரிவித்தார்.