மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் வை.கோ மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனியை கடந்த  திங்கட்கிழமை அதிரடியாக அப்பொறுப்பிலிருந்து நீக்கினார். இச்சம்பவம் அக்கட்சியில் மட்டும் இன்றி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை ம.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளரான மார்கோனி தொடர்ந்து 30 ஆண்டு காலத்திற்கும் அக்கட்சியில் சிறப்பாக பணியாற்றி, பல்வேறு பதவிகள் வகித்துவந்தார். அதன் தொடர்ச்சியாக மாநில இளைஞரணி செயலாளராகவும் உயர்ந்து சமீபத்தில்தான் அவருடைய கடுமையான உழைப்பை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க மாவட்ட செயலாளர் பதவி அவருக்கு கிடைத்தது.




மேலும் கட்சியில் வைகோ, துரை வைகோ ஆகியோருடன் மிகவும் நெருக்கமுடன் பழகி வந்தார். இந்நிலையில் தான் மார்கோனியை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து வைகோ நீக்கியுள்ளார். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்பட்டு வருகின்றது. அதில் ஒரு சில காரணங்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  மார்கோனி பாரதிய ஜனதா கட்சிக்கு மாறப்போகிறார் என்ற ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு அடங்கியது. அதன் பின்னர் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது தருமபுரம் ஆதீனகர்த்தர் உள்ளிட்ட இந்து அமைப்புனருடன் நெருக்கமாக மார்கோனி பழகி வந்ததை தொடர்ந்து மார்கோனி பா.ஜ.க வுக்கு செல்வது நிச்சயம் என்றும் கூறப்பட்டது. 




இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பவுன்ராஜ் சீர்காழியில்  உள்ள மார்கோனியின் வீட்டுக்கு வந்து அ.தி.மு.கவில் இணையுமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு அடுத்த இரு தினங்கள் மார்கோனி சேலம் சென்று அப்படியே ரகசியமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார் என்று ஒரு செய்தி பரவியது. இதனை தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க செயலாளர் நீக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க அவசர செயற்குழுக் கூட்டம் நேற்று குத்தாலத்தில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில், மதிமுகவுக்கு ஊறுவிளைவிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. வைகோவின் வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை மாவட்ட மதிமுக தொடர்ந்து செயல்படும் என்றும், புதிய மாவட்ட செயலாளரை நியமிக்க பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோரை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் கூறுகையில்,




மயிலாடுதுறை மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் மாற்றுக் கட்சியில் இணைய திட்டமிட்டதாக கிடைத்த செய்தி காரணமாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக இருந்த மார்கோனி கட்சி பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் வைகோவால் நீக்கப்பட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மார்கோனி கொலை வழக்கில் சிக்கிக்கொண்டு, நாகர்கோயிலில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்ட வந்தபோது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தன்னை ஆள்வைத்து கொன்றுவிடுவார் என பயமாக உள்ளது என்று சொன்னபோது, வைகோதான் அவரைக் காப்பாற்றினார். இன்று பணத்தை வைத்து எதையும் சாதித்து விடலாம் என்று மார்கோனி நினைப்பது மதிமுகவில் நடக்காது என்றார். அப்போது, மதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.




மேலும் இதுகுறித்து மார்கோனி தரப்பில்  கூறுகையில், மதிமுக பொதுச்செயலாளர் மற்ற பொறுப்பாளர்களின் செல்போன் மூலம் மார்கோனியை தொடர்பு கொண்டு தவறாப செய்தியால் இச்சம்பவம் ’தெரியாம நடந்து போச்சு. ஒரு லட்டர் எழுதிக்கொடு. சேர்த்துக் கொள்கிறேன்’ என்றார் என கூறும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அடுத்த மாவட்ட செயலாளருக்கான முன்னெடுப்புகள் நடைபெற்றது வருவது குறிப்பிடத்தக்கது.