கோவை வளர்ச்சி திட்டங்கள் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்த பணிக்கு அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.  


செந்தில் பாலாஜி கைது:


ஊழல் புகாரில் கைதாகி விசாரணை காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய பைபாஸ் அறுவை சிகிச்சையால் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். ஊழல் புகாரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதால் செந்தில் பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சார துறை அமைச்சர்கள்  முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருவதால், அவரை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அரசு அறிவித்தது.


இந்த நிலையில், வீட்டுவசதி மற்றும் நகரப்புற துறை அமைச்சர் முத்துசாமி அனைத்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கோவை வளர்ச்சி திட்டப்பணிகளை கவனிப்பார் என்றும், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துதல், நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை கண்காணித்தல், அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை முத்துசாமி மேற்கொள்வார் என்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.  இதனுடன் இயற்கை சீற்றம், நோய் தொற்றுகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதுடன், மாவட்டத்தின் வருவாய் திட்டங்களை செயல்படுத்துதல், பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை முத்துசாமி மேற்கொள்வார் என கூறப்பட்டுள்ளார்.  


முத்துச்சாமி நியமனம்


கொங்கு மண்டலத்தின் முக்கியமான பகுதியாக கோவை இருந்தாலும், சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப்பெறாமல் கோட்டை விட்டது. இதனால், கோவைக்கு என தனி அமைச்சர் இல்லாத பட்சத்தில்,  பொறுப்பு அமைச்சரை நியமித்து நிர்வாக சீர்த்திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கு கொடுக்கப்பட்டது.


தற்போது, செந்தில் பாலாஜி கவனித்து வந்த கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிக்கும் பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் திமுக ஆழமாக காலூன்ற வேண்டும் என்பதால், முத்துசாமியை நியமித்து நிர்வாக சீர்த்திருத்தங்கள் மட்டும் இன்றி, கட்சி வளர்ச்சிக்கான பணிகளிலும் திமுக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.