பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தனது சொந்த நிதியில் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம்" என்ற கையேடினை வழங்கியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையிலும், அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற உதவும் வகையிலும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஏற்பாடு செய்துள்ள "வெற்றி நிச்சயம்" வினா-விடை கையேடு வழங்கும் திட்டத்தைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்துள்ளார்.
கல்வித் தரத்தை உயர்த்த புதிய முயற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இக்கையேடுகள் வழங்கப்படுகின்றன. பொதுத்தேர்வில் மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி எதிர்கொள்ளவும், முக்கியமான வினாக்களை எளிதில் படித்து அதிக மதிப்பெண் எடுக்கவும் இந்தக் கையேடு பெரும் துணையாக இருக்கும்.
இந்த மகத்தான கல்விச் சேவையை மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தனது சொந்த நிதிப் பங்களிப்பின் மூலம் மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
செம்பனார்கோவில் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கையேடுகளை வழங்கினார். செம்பனார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சம்பந்தம் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நடைபெற்ற தனித்தனி நிகழ்ச்சிகளில் அமைச்சர் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில்: "மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான பாடக் குறிப்புகளைத் தனது சொந்தச் செலவில் வழங்கி வரும் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனின் முயற்சி பாராட்டுக்குரியது. மாணவர்கள் இந்தக் கையேட்டைச் சரியாகப் பயன்படுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தை மாநில அளவில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும்" என்று வாழ்த்தினார்.
பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்
இந்நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் இளையராஜா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மற்றும் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாணவர்களின் நன்றி
"வெற்றி நிச்சயம்" கையேடுகளைப் பெற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்குக் கவியரசு மற்றும் வழிகாட்டி நூல்கள் வாங்குவது கடினமாக உள்ள சூழலில், சட்டமன்ற உறுப்பினரின் இந்தச் சொந்த நிதி உதவித் திட்டம் தங்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர். கையேடுகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனுக்கு மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தேர்ச்சி விகிதம் அதிகரிக்கத் திட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை 100 சதவீதம் எட்டச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தகுதியான மாணவர்களுக்கும் இந்தக் கையேடுகள் படிப்படியாக விநியோகம் செய்யப்பட உள்ளன. கடந்த ஆண்டுகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தனது சொந்த செலவில் பேனா வழங்கி நிலையில் இந்தாண்டு புத்தகங்கள் வழங்கியுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.