மயிலாடுதுறை: மறைந்த தேசியத் தலைவர் காமராஜர் குறித்தும், நாடார் சமூகம் குறித்தும் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்த முக்தார் அகமது என்பவரைக் கைது செய்யத் தமிழக அரசு தவறினால், வரவிருக்கும் தேர்தல்களில் நாடார் சமூகம் ஒரு 'நல்ல முடிவை' எடுக்கும் என நாடார் மகாஜன சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் அவர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Continues below advertisement

டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறையில் நாடார் மகாஜன சங்கத்தின் டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம், நாடார் உறவின்முறை பரிபாலன சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசிய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை கோரிக்கை

செய்தியாளர்களிடம் பேசிய கரிக்கோல்ராஜ், "நாடார் சமூகம் குறித்தும், மாபெரும் தேசியத் தலைவரான காமராஜர் குறித்தும் முக்தார் அகமது என்பவர் சமூக ஊடகத்தில் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மீது மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நாங்கள் புகார் அளித்துள்ளோம். தமிழக அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை உடனடியாக விசாரித்து, முக்தார் அகமது மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என்றார்.

Continues below advertisement

காமராஜருக்கு முன்பே சமூகத்தின் பங்களிப்பு

நாடார் சமூகத்தின் பாரம்பரிய பெருமைகளைக் குறிப்பிட்ட அவர், "காமராஜர் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு முன்னரே, நாடார் சமூகத்தினர் பள்ளிக்கூடங்கள், வங்கி மற்றும் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறோம். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் நாடார் சமூகத்தின் பங்களிப்பு நீண்ட வரலாறு கொண்டது," என்று தெரிவித்தார்.மேலும், "தேசியத் தலைவராக வளர்ந்த காமராஜரைக் கண்டு நாடார் சமூகம் பெருமிதமடைந்தது உண்மைதான். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் நாடார் சமுதாயத்துக்காக எவ்வித உதவியும் செய்யவில்லை. மாறாக, உழைப்பால் முன்னேறிய ஒரு சமுதாயத்தையும், அனைவராலும் மதிக்கப்படும் ஒரு தலைவரையும் அவதூறாகப் பேசுவதைத் நாடார் மகாஜன சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது," என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

தேர்தல் குறித்து முக்கிய எச்சரிக்கை

இந்த அவதூறு பேச்சு குறித்துத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், "தேர்தலுக்கு முன்பு இந்தச் சமூகம் ஒரு நல்ல முடிவை எடுக்கும்," என்று கரிக்கோல்ராஜ் எச்சரித்தார்.மேலும், இத்தகைய அவதூறு சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "இதற்கு முன்னரே, தி.மு.க.வில் உள்ள ஆர்.எஸ். பாரதி, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் காமராஜர் குறித்து விமர்சித்தார்கள். அப்போதும்கூட அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதே அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது இதுபோன்று அவதூறு பரப்புவது தொடர்ந்திருக்காது," என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பனைத் தொழிலை மேம்படுத்தக் கோரிக்கை

அரசிடம் பனைத் தொழிலை மேம்படுத்துவது குறித்த கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். "பனை சொசைட்டி (Palm Society) இருந்தபோது பனைப் பொருள்களின் உற்பத்தி நன்றாக இருந்தது. ஆனால், தற்போது பனைத் தொழிலை காதி பவனில் இணைத்த பிறகு, பனைவெல்லம், கருப்பட்டி உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. பனைப் பொருள்கள் உற்பத்தியைத் தடுப்பது, பெருநிறுவனங்களின் (கார்ப்பரேட் நிறுவனங்களின்) முயற்சியாகவே நாங்கள் நினைக்கிறோம்," என்று அவர் வேதனை தெரிவித்தார்."பதனீரையும் பாக்கெட்டில் விற்பனை செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினால், அது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பனைவெல்ல சொசைட்டிகளை உருவாக்கினால், கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரித்துக் கொடுக்கப் பனைத் தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கரிக்கோல்ராஜ் தமிழக அரசை வலியுறுத்தினார்.

நாடார் சமூகத்தின் உழைப்பையும், காமராஜரின் பங்களிப்பையும் அவதூறு பேசிய முக்தார் மீது உடனடியாகச் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாடார் மகாஜன சங்கம் முன்வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது வரவிருக்கும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்ற அரசியல் எச்சரிக்கையையும் அச்சங்கம் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.