தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்க உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சவாலான சட்டமன்ற தேர்தல்:
அதிமுக, நாம் தமிழருடன் இணைந்து தவெக-வும் ஆளுங்கட்சிக்கு சவால் தரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வரும் தேர்தல் திமுக-விற்கு சவாலான தேர்தலாக இருக்கும் என்று கருதப்படும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு பக்கம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களது பரப்புரைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக-வின் 3 அஸ்திரங்கள்:
இந்த நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க ஆளுங்கட்சி அடுத்தடுத்து முக்கிய அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளது. அதாவது,
1. பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூபாய் 3 ஆயிரம் ரொக்கப்பரிசு
2. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்
3. 10 லட்சம் மாணவர்களுக்கான மடிக்கணி
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்த 3 திட்டங்களும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. இந்த திட்டங்களை தமிழக அரசு அடுத்தடுத்து அறிவித்ததற்கு முக்கிய காரணமாக வரும் தேர்தலில் அதிமுக-விற்கு நிகராக, தவெக-வும் சவால் அளிக்கும் என்று கருதப்படுவதே காரணம் ஆகும்.
3 ஆயிரம் ரொக்கம்:
திமுக ஆட்சியில் 2022, 2025 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், தேர்தலுக்கு முந்தைய இந்த பொங்கலில் ரொக்கப்பரிசாக ரூபாய் 3 ஆயிரம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது திமுக-விற்கு தேர்தலில் மிகப்பெரிய பலமாக மாறும் என்று திமுக கருதுகிறது.
தமிழ்நாடு ஓய்வூதிய திட்டம்:
மேலும், நீண்டகாலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைக்கும் கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது ஆகும். நடைமுறையில் இதை சாத்தியப்படுத்துவதில் ஏராளமான சிரமங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம், திமுக அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஆதங்கத்தை தணித்து அதை வாக்குகளாக மாற்ற இயலும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி:
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய புரட்சிகரமான திட்டம். திமுக ஆட்சியில் இது நிறுத்தப்பட்டபோது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், நேற்று 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியுள்ளது தமிழக அரசு.
இதன்மூலம் இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற முடியும் என்று நம்புகின்றனர். மேலும், பல ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியை 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கியிருப்பதால், மாணவர்களின் குடும்பங்களின் வாக்குகளையும் திமுக வசப்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில் தங்கள் மீதான விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தங்கள் வாக்கு வங்கிகளை பலப்படுத்தும் வகையில் திமுக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திமுக அரசின் திட்டங்கள் அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர வைக்குமா? என்பதை வரும் தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.