சங்கி மற்றும் கொத்தூஸ் இரண்டுக்கு ஏமாற்றம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே ஏற்றப்பட்ட தீபம்

திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தூணில் கார்த்திகை திருநாள் அன்று மட்டும் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அங்கு தீபமேற்றப்படாமல் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் மலைத்தூணில் தீபமேற்றப்படுமென எதிர்நோக்கி காத்திருந்த இந்து அமைப்பினர் மலையடிவாரத்தில் நின்று அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர்.

தீப வழக்கும், சர்ச்சையும்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பல அமைப்புகளால் வைக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மலைத்தூணில் தீபமேற்ற அனுமதியளித்தது. இந்நிலையில் மலைத்தூணியில் தீபமேற்றுவதற்கு கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மத்திய தொழில் பாதுகாப்புப்படையுடன் சென்று மலைத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார்.

Continues below advertisement

ஆட்சியர் பிறப்பித்த தடை உத்தரவு

மேலும் மலைத்தூணில் தீபமேற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் எனக்கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் 163-தடை உத்தரவையும் அமல்படுத்தினார். இதனையும் ரத்துசெய்த உயர்நீதிமன்றக்கிளை, தடை ரத்துக்கு எதிராக ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைகோரி தமிழக அரசு வாதிட்டது.

தீபமேற்ற நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு, கார்த்திகை திருநாள் அன்று மட்டும் மலைத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளது. தீபமேற்றும் நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும், அக்குழுவை மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்ய வேண்டுமெனவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டுமெனவும் தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டனர். 

விசாரணக்கு வராத சீராய்வு மனு

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று ஆஜராகாததால் மனுவானது விசாரிக்கப்படவில்லை. மேலும் குருநானக் ஜெயந்தி காரணமாக இன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால்  மனு விசாரிக்கப்படவில்லை . 

யாரை விமர்சித்துள்ளார் மாணிக்கம் தாகூர்?

இந்நிலையில் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபத் தூணில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்,சங்கி மற்றும் கொத்தூஸ் இரண்டுக்கு ஏமாற்றம் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சங்கி எனவும், கொத்தூஸ் எனவும் அவர் யாரை குறிப்பிட்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றியிருந்தால் தவெக அரசை விமர்சிக்கலாம் என காத்திருந்தோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.