Vijays JanaNayagan Cong: தணிக்கை குழுவும் பாஜகவால் ஆயுதமாக மாற்றப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஜனநாயகன் பிரச்னை - காங்கிரஸ் அட்டாக்:
அரசியல் பயணத்தை தொடர்ந்து விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ஜனநாயகன், ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தணிக்கை குழு சான்று கிடைக்காததால், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விஜயின் தவெக கட்சியை தங்களது கூட்டணியில் இணைக்கும் நோக்கில், தணிக்கை குழு மூலம் பாஜக அழுத்தம் அளிப்பதாக சில குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன. இந்நிலையில் தான், திரைப்படங்களுக்கான தணிக்கை குழுவையும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் பாஜக பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
”ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சாரமா?”
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “ஆர்.எஸ்.எஸ் பரப்புரை திரைப்படங்கள் ஈர்க்கப்படாமலும், நம்பகத்தன்மை இல்லாமலும், பொது நலன் இல்லாமலும் இருக்கும்போது, மோடி-ஷா ஆட்சி நம்பிக்கையுடன் அல்ல, கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறது. இப்போது திரைப்படத் துறை கேள்விக்குறியாக உள்ளது. பிரிவு 19(1)(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கீழ், உரிமைகள் சட்டத்தின் மூலம் அல்ல, பயத்தின் மூலம் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகிறது.
ED, CBI, IT - எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கான முன்னணி ஆயுதங்களாக மாற்றப்படுகின்றன. இப்போது சென்சார் வாரியம் கூட சினிமாவையும் கருத்துக்களையும் கட்டுப்படுத்த ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாகக் மாற்றப்படுகின்றன. அதே நேரத்தில் BJP-RSS பிரச்சார திரைப்படங்கள் "கலாச்சாரம்" என்று கடத்தப்படுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. அதற்கு அரசியலமைப்பு பாதுகாப்பு தேவை. கலை அதிகாரத்தின் முன் மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது” என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகன் படத்தை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், அவர் இந்த கருத்தை வெளியிட்டு இருக்கும் சூழல் என்பதை, விஜய்க்கு ஆதரவானதாகவே கருதப்படுகிறது.
விஜய்க்கு அழுத்தம் கொடுக்கிறதா பாஜக?
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி ஆட்சிக் கட்டில் அமர, அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட, அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து வருகிறது. அந்த வகையில் விஜயின் தவெக உடனும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் தவெக இருக்காது என அக்கட்சி தரப்பு திட்டவட்டமாக கூறியுள்ளதாம். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டிற்கான பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், சட்டமன்ற தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய ஸ்பாய்லராக விஜய் இருப்பார் என்றும் கூறியிருந்தார். இந்த சூழலில் தான் முந்தைய விஜய் படங்களுக்கு இல்லாத வகையில், ஜனநாயகன் படத்தின் மீது தணிக்கை குழு கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறது.