இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியினை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வலுவான கூட்டணி கட்சி உருவாகும் என்று கூறப்படும் நிலையில் தான், பிரசாந்த் கிஷோர் மற்றும் ராகுலின் சந்திப்பு பெரும் பரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையில் தான் மம்தா பானர்ஜியின் டெல்லி பயணமும் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.


தேசிய அரசியல் கடந்த சில நாட்களாகவே பரப்பினைச் சந்தித்து வருகிறது. எப்படியாவது 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக-வை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று முனைப்போடு எதிர்க்கட்சிகள் இருந்து வருகின்றன. அதற்கேற்ப தங்களது கூட்டணிகளை தற்பொழுது பலப்படுத்தி வருகின்றனர் எதிர்க்கட்சிகள்.  இந்நிலையில் தான் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் உட்பட பல்வேறு  தலைவர்களை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதோடு மட்டுமில்லாமல் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி போன்றவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியப்பின்பு காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இருந்தப்போதும் வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதற்காக இந்த சந்திப்புகள் நடைபெற்றது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.





இந்த அரசியல் சூழலில் தான், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி  வருகின்ற ஜூலை 25 ஆம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.தொடர்ந்து 4 நாட்கள் டெல்லியில் முகாமிடும் மம்தா, 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத்தேர்தலை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. குறிப்பாக சோனியா காந்தி, தேசிய வாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார், சமாஜ் வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலையும் சந்திக்கவுள்ள நிலையில் பாஜக விற்கு எதிராக வலுவான கூட்டணி அமையவுள்ளதாகவும், கூட்டணியில் மம்தா பானர்ஜி பெரும் பங்கு வகிப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.


இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,  பாஜகவினை தோற்கடித்து மேற்கு வங்கத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியினை வெற்றோம் எனவும் இந்த மாபெரும் வெற்றிக்குப்பிறகு முதன் முறையாக டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் நிலை சற்றுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் டெல்லி பயணம் மேற்கொள்வதாகவும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியினை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டால் நிச்சயம் சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.





ஏற்கனவே அரசியல் உத்தி வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்களை சந்தித்த நிலையில், தற்போது மம்தா பானர்ஜியும் சந்திக்கவுள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், கொரோனா தொற்றினை அரசு கையாண்ட விதம், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய சிலிண்டர் விலை போன்ற விவகாரங்களுக்காக மத்திய அரசை ஒன்றிணைந்து எதிர்ப்பது குறித்து மம்தா – சோனியா சந்திப்பில் ஆலோசிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.