மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாளை தமிழ்நாடு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விமானம் மூலம் சென்னை வரும் மம்தா, நாளை மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.



மம்தா பானர்ஜி - மு.க.ஸ்டாலின்


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு


மத்திய பாஜக அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் மாநில முதலமைச்சர்களில் மமதா பானர்ஜி குறிப்பிடத்தக்கவர். புதிய கல்விக் கொள்கை, நீட், இந்தி மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாடு அரசும் மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ள நிலையில், மமதா பானர்ஜி தமிழ்நாடு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசவுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இல.கணேசன் இல்லம் செல்லும் மமதா பானர்ஜி


உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனை சந்தித்து நலம் விசாரிக்கவும் அவரது அண்ணனான எல்.கோபலனின் 80வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவுமே தமிழ்நாடு வருவதாக மமதா பானர்ஜி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, முக்கியமான அரசியல் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளவே அவர் தமிழ்நாடு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.



மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசன்


இணக்கமற்ற சூழலும் - இணக்கமும்


2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் அல்லாத பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவை போல மமதா பானர்ஜியும் முயற்சித்து வருகிறார். ஆனால், மமதா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடனும் காங்கிரஸ் தலைமையுடனும் மு.க.ஸ்டாலின் நல்ல இணக்கத்தில் இருக்கிறார். இந்நிலையில், மு.க.ஸ்டாலினுடனான மமதா பானர்ஜியின் சந்திப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.


 பாஜகவிற்கு எதிரான ஒரே கூட்டணி ?


பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக திருமாவளவன் மணிவிழாவில் அறிவித்துவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜியுடனான சந்திப்பின்போது பாஜகவிற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவது கட்டாயம் என்பதை வலியுறுத்தி பேசுவார் என கூறப்படுகிறது. 2024ல் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ், இடதுசாரிகளோடு தேர்தலுக்கு முந்தைய கூட்டணியோ அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியோ வைத்துக்கொள்ளலாம் என்றும் அவரவர் எங்கு பலமாக இருக்கிறோமோ அங்கு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்து போட்டியிட ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என்றும் வலியுறுத்துவார் என்றும் சித்தரஞ்சன் சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


காங்கிரஸ் தலைமையை ஏற்க மறுக்கும் மமதா – சரிசெய்வாரா ஸ்டாலின் ?


பாஜகவிற்கு எதிரான தீவிரமான நிலைப்பாட்டை மமதா பானர்ஜி கொண்டிருந்தாலும் அதே அளவிற்கு காங்கிரஸ் கட்சியையும் அவார் வெறுக்கிறார். இந்நிலையில், காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொண்டு அவர்களது தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க மமதா தயங்கினால், மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்ப்போம் என்றும் கூட்டணிக்கு தலைமையாக யாரும் இல்லாமல் ஒருங்கிணைக்க ஒரு குழுவை நியமித்து ஒரே குடையின் கீழ் பாஜகவை எதிர்த்து போட்டியிடலாம் என்ற உத்தியை ஸ்டாலின் மமதவிடம் தெரிவித்து சம்மதம் வாங்க முயற்சிப்பார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


தமிழ்நாட்டை மையப்படுத்தி உருவாகும் பாஜக எதிர்ப்பு கூட்டணி


வட மாநிலங்களில் பாஜக பெரிய அளவில் வெற்றியை ருசித்தாலும் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் பாஜவால் இன்று வரை ஆட்சியை பிடிக்க முடியவில்லை. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் அங்கு அதே அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படுகிறது. அப்படி இருக்கையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவுகள் தமிழ்நாட்டில் இருந்து எடுக்கப்படவிருப்பதற்கான வாய்ப்புகளைதான் மமதா பானர்ஜியின் இந்த வருகை வெளிப்படுத்துகிறது என்று மூத்த பத்திரிகையாளர்கள் கணிக்கின்றார்கள்.


கூட்டணிக்கு திமுக தலைமையேற்குமா ?


அதனடிப்படையில் பாஜகவிற்கு எதிரான நிலைபாடு கொண்டு அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடனும் முரண்பட்டிருக்கும் கட்சி தலைவர்களுடனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல உறவில் இருக்கிறார். அப்படி இருக்கையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு திமுக தலைமையேற்பதற்கான வாய்ப்புகள் கூட அதிகமாக இருக்கின்றன.


மமதா மனதில் மாற்றம் ஏற்படுமா ?


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான மேற்கு வங்க முதல்வர் மமதாவின்  சந்திப்பிற்கு பிறகு இந்திய அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் மமதா பானர்ஜியின் மனதில் ஏற்படும் மாற்றம் 2024 தேர்தல் கூட்டணி கணக்குகளுக்கு அடித்தளம் அமைக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


ஆளுநர் பற்றியும் ஆலோசனை 


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு / பேச்சுக்கு எதிராக திமுக கடுமையான எதிர்வினையாற்றிவந்த நிலையில், சமீபத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக ஆளுநர் பதவிவிலக வேண்டும் என்று கூட்டறிக்கை கொடுத்திருந்தனர். ஏற்கனவே, மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜப்தீப் தன்கரும் மமதா பானர்ஜி அரசுக்கு குடைச்சல் கொடுத்துவந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அவர் மாற்றப்பட்டு, பொறுப்பு ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆளுநர் விவகாரம் குறித்து இருமாநில முதல்வர்களும் பேசி முடிவெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி


நினைவு பரிசு வழங்கவுள்ள தமிழ்நாடு முதல்வர்


தன்னுடைய இல்லத்திற்கு வரும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு தமிழ்நாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஒரு நினைவு பரிசை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை அல்லது மாமபுல்லபுரம் சிற்பம் தொடர்பான சிலையை வழங்கலாமா என்றும் அவர் ஆலோசித்து வருகிறார்.


செய்தியாளர்களை சந்திப்பாரா மமதா ?


நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேச மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தாங்கள் பேசிய கருத்துகளின் முக்கியத்துவத்தை பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.