வார்டு குழு..

 

செங்கல்பட்டு நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகள் மேம்பாட்டில் பொதுமக்களும் பங்களிக்கும் வகையில், வார்டு குழு மற்றும் பகுதி சபை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளை, செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வந்தது. நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளின் செயல்பாடுகளில், பொதுமக்கள் பங்களிக்கவும், உள்ளாட்சி மன்றத்தினர், வார்டு பகுதியினருடன் ஆலோசிக்கவும், அடிப்படை வசதிகள் குறித்து, ஆலோசனை, புகார் என, அப்பகுதியினர் தெரிவிக்கவும், வார்டு குழு மற்றும் பகுதி சபை ஏற்படுத்த, அரசு முடிவெடுத்தது. இதற்கான விதிகளை, நகராட்சி நிர்வாகத் துறை, கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது வெளியிட்டது. வார்டு குழு, பகுதி சபை அமைக்க, நகராட்சி நிர்வாக இயக்குனர், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, தற்போது அறிவுறுத்தியுள்ளார்.



திட்டங்கள் குறித்து...

 

 அதன்படி, வார்டு குழு, பகுதி சபை ஏற்படுத்தும் முயற்சி துவங்கி உள்ளது. வார்டின் ஒவ்வொரு பகுதிக்கான மேம்பாடு பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் குறித்து, உள்ளாட்சி மன்றத்திடம் இக்குழுவினர் ஒப்படைப்பர். மக்களின் அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள், அதுகுறித்த தீர்வுகள் குறித்து, மன்றத்தில் பரிந்துரைக்கும். நகராட்சி அலுவலர் அறிவுறுத்தும் செயல்பாடுகளை, குழு செயல்படுத்தலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



அவசர கவுன்சிலர் கூட்டம்

 

இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சி அவசர குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் வார்டு குழு அமைப்பதில், முறைகேடு நடைபெற்றதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக கவுன்சிலர் பானுப்ரியா செந்தில், பேசுகையில் முறையாக இந்த குழு அமைக்கப்படவில்லை என்றும் ஒரு தலைப்பட்சமாக இந்த குழு அமைக்கப்பட்டதாக கூறி நகராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அரசின் அரசாணையை பின்பற்றாமல், ஆளுங்கட்சிக்கு தேவையான நபர்களை நியமிப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு செய்த உடனே நகர் மன்ற கூட்டமும் முடிக்கப்பட்டது.



 

 முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

 

இதனை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் சிலர்,  செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக கவுன்சிலர்கள் பானுப்பிரியா செந்தில் , சரிதா உள்ளிட்ட 6 கவுன்சிலர்கள்  அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள், வார்டு குழு உறுப்பினர்களாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன் வைத்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் கவுன்சிலர்களிடம் வார்டு குழு உறுப்பினர்களாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என விவரம் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கலந்து சென்றனர். இருந்தும் முறையாக இந்த வார்டு குழு உறுப்பினர்கள் நியமனம் நடைபெறவில்லை என குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் முன்வைத்தனர்.