நடிகை கவர்ச்சி காட்டுவதை போல வாக்குறுதிகளை கொடுத்தும் திமுக மக்களை ஏமாற்றுகிறது - என செல்லூர் ராஜூ பேட்டி.
செல்லூர் ராஜூ திண்ணைப் பிரச்சாரம்
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்ற தொகுதியான மத்திய தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதுரை வடக்கு மாசி வீதி நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவில் முன்பு திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அப்பகுதியில் உள்ள பெண்களை சந்தித்து திமுக அரசு கொடுத்த நீட் தேர்வு விலக்கு, கல்வி கடன் ரத்து, மதுவிலக்கு அமல்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என நோட்டீஸ் மூலம் எழுதிப்பெற்று அதனை பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடம் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றினார்களா இல்லையா என கேட்டு விவரங்களை குறித்துக் கொண்டார்.
திமுகவிற்கு மட்டுமே கை வந்த கலை
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,..”திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியால் மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் உள்ளார்கள். சினிமாவில் கதை ஒரு பக்கம் கவர்ச்சி ஒரு பக்கம் இருக்கும். ஒரு நடிகை பாடலுக்கு அதிகளவில் தொகை கேட்கிறார். நடிகை தமன்னா 3 கோடி, நயன்தாரா ஒரு பாடலுக்கு 5 கோடி கேட்கிறார். அதுபோல மக்களை ஏமாற்ற திமுக வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. நடிகையை ஆட விட்டு ஜிகு ஜிகு என செய்வது போல வாக்குறுதிகளை திமுக கொடுக்கிறார்கள். இதுபோன்ற திறமை திமுகவிற்கு மட்டுமே கை வந்த கலை.
கரூர் சம்பவம் குறித்து செல்லூர் ராஜூ பேசாமல் புறப்பட்டார்
நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி இழைத்ததே காங்கிரஸ் தான். ப.சிதம்பரத்தின் மனைவி தான் நீட் தேர்விற்கு உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். என் தந்தை அறிவு ஜீவி, என் தந்தை முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என முதல்வர் பெரிய நகைச்சுவை செய்து வருகிறார். என பேசினார். தொடர்ந்து டிடிவி தினகரன், கரூர் சம்பவம் குறித்து செல்லூர் ராஜூ பேசாமல் புறப்பட்டார். முன்னதாக நான் மாடக்குளம் கண்மாய் பிரச்னை குறித்து இடைவிடாது செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் நீங்கள் விஜய், விஜய் என ஓட்டிவிட்டீர்கள் என சிரிக்க சிரிக்க பேசினார்.