அஜித்குமார் இல்லத்தில் ஆறுதல்
 
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்!’ - என்ற பயணத்துக்காக சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை காவல்துறையால் கொடூரமாகத் தாக்கி மரணம் அடைந்த திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் இல்லத்திற்குச் சென்று அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
 
வேறு வழியின்றி இந்த அரசு அஜித்குமாரை தாக்கிய காவலர்களை கைது செய்திருக்கிறது
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ‘’மக்களை பாதுக்காக்ககூடிய காவல்துறையால், இன்று விலைமதிக்க முடியாத ஒரு உயிரை இழந்திருக்கிறோம். இது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. நகை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணையில் அஜித்குமார் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார். இது குறித்து 29-6-25 அன்று நான் கண்டன அறிக்கை வெளியிட்டேன். அஜித்குமார் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களோடு அதிமுக நிர்வாகிகளும் இணைந்து போராடியதால் வேறு வழியின்றி இந்த அரசு அஜித்குமாரை தாக்கிய காவலர்களை கைது செய்திருக்கிறது.
 
முழு பொறுப்பையும் ஸ்டாலின் அரசுதான் ஏற்க வேண்டும்
 
இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் மதுரை உயர்நீதிமறத்தில் வழக்கு தொடர்ந்தார். மதுரை உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரித்தது. ஒரு குடிமகன் உயிரிழக்க அரசே காரணமாக இருந்திருக்கிறது என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகே  தமிழக அரசு  சிபிஐ விசாரணை அறிவித்துள்ளது. அஜித்குமாரின் உடல்கூராய்வு அறிக்கையில் அவர் 44 இடங்களில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிவிக்கை தெரிவிக்கிறது. காவல்துறை அதிகாரிகளுக்கு பெரிய அழுத்தம் கொடுத்ததால்தான் அவர் இந்த அளவுக்கு தாக்கப்பட்டுள்ளார். முழு பொறுப்பையும் ஸ்டாலின் அரசுதான் ஏற்க வேண்டும்.
 
தினமும் நடைபெறும் கொலை குற்றம்
 
அரசு சரியாக அணுகியிருதால் ஒரு உயிரை இழந்திருக்க மாட்டோம். தமிழ்நாடு முழுவதும் கொலை கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. நேற்றைக்குக்கூட ஒரு மாணவன் இருசக்கர வாகனத்தில் போகும்போது, காரை மோதி அவர் கொல்லப்பட்டுள்ளார். இது தினந்தோறும் நடக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சிகளில் தங்கம் நிலவரம் வெள்ளி நிலவரம் என்ன என்று தினமும் செய்தி என்பதுபோல் கொலை நிலவரம் என்ன என்றுதான் பார்க்கவேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது.
 
5 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும்
 
தமிழகத்தில் 20 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அஜித்குமார்  குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு நல்ல வேலை, அவர்கள் விரும்பிய இடத்தில் வேலை கொடுப்போம். அதிமுக சார்பாக அவர் குடும்பத்துக்கு குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும்..’’ என்று பேசினார்.