2021 சட்டமன்ற தேர்தலின் தோல்விக்கு பிறகு அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களவை தேர்தலை இரு கட்சிகளும் தனித்தனியான கூட்டணியில் சந்தித்து மாபெரும் தோல்வியை சந்தித்தது. தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக 5வது முறையாக தேர்தல் தோல்வியை சந்தித்து வருவதும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர்.
இண்டியா கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகள் இணையும் என்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இப்போதே தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். மறுபக்கம் பாஜகவும் தீவிரப்படுத்தி வருகிறது. அண்மயைில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ் ஆட்சி அதிகாரத்தை பகிர அதிமுக ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இபிஎஸ் கூறியதை போன்று பாஜகவு ஏமாளி கட்சி அல்ல என கருத்து தெரிவித்தார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இன்று கோவில்பட்டியில் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியிருப்பது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, 1998ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துகொண்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போன்று இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சைக் கேட்டு ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தி விட்டோம்.
ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழையால் 14 ஆண்டுகள் திமுக கூட்டணி 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் திமுக வளர்வதற்கு காரணமே பாஜகதான். திமுகவிற்கு அதிகாரம் கொடுத்தது பாஜக தான். ஆனால், இன்று திமுக பாஜகவை தீண்டத்தகாத கட்சியாக பார்க்கிறது என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மேலும், ஜெயலலிதா எடுத்த முடிவை வரலாற்றுப்பிழை எனக் கூறியிருப்பது அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.