இந்திய ரயில்வே துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளது. இதற்கான அறிவிப்புகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவதுடன், அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டு வருவது வழக்கம்.


இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தியிலே பதிவுகளை பதிவிட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்திய ரயில்வேயில் உள்ள வேலைக்கான அறிவிப்பை இந்தியில் மட்டுமே பதிவிட்டுள்ளது. இதனால், நாட்டில் இந்தி தெரியாத நபர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.






மத்திய ரயில்வே அமைச்சகத்தின் இந்த செயலுக்கு, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய ரயில்வே அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு குறித்த இந்தியிலான பதிவுகளை புகைப்படங்களாக பகிர்ந்துள்ள சு.வெங்கடேசன், அந்த ட்வீட்டும் இந்தியில்... பொருள் அறிய "கூகுள்" உதவியை தேடனும். ரயில்வே வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கானதா? அல்லது ஹிந்தியாவுக்கானதா? மொழிபாரபட்சத்தை கைவிடுங்கள் ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்” என்று எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பல்வேறு துறைகளும் சமீபகாலமாக இந்திக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதனால், இந்தி பேசாத மாநிலங்கள் அடங்கிய தென்னிந்திய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


 










தமிழ்நாட்டில், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளுங்கட்சியாக இருந்தபோதும் இந்தி திணிப்பை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் இந்தி திணிப்பை மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளிலும் இந்திக்கே பிரதான முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் பிற மாநில மாணவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் மிகுந்த கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.