அதிமுகவின் 50வதுஆண்டு பொன்விழா பரிசாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமையும்
என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டியளித்தார்.



மதுரை மாவட்ட 19வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் மற்றும் டி.குண்ணத்தூர் கிராம ஊராட்சி 4 வார்டுதேர்தல் நடைபெற்றது. இதனை  தொடர்ந்து குண்ணத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்துடன் வாக்களித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது..



‛‛தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் சில மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தற்போது குண்ணத்தூர் கிராம ஊராட்சி வார்டு தேர்தலில் எனது குடும்பத்துடன் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக பெருமையடைகிறேன். 



புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவை ஏழை எளிய மக்களின் நலன காக்கும் இயக்கமாக உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து 49 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்றைக்கு 50 ஆண்டு பொன் விழா காண்கிறது. இந்தபொன்விழா ஆண்டின் பரிசாக நடைபெறும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் தற்போது இங்கு நடைபெறும் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை இரட்டை இலைக்கு பரிசாக மக்கள் வழங்குவார்கள்.


அம்மா அரசை தலைமை தாங்கி வந்த எடப்பாடியார் சாமானிய முதலமைச்சராக இருந்து  தொழில்துறை, கல்வித்துறை, உயர்கல்வித் துறை, வேளாண்துறை, உள்ளாட்சிதுறை என்று அனைத்து துறைகளையும் இந்தியாவின் முதன்மை துறையாக உருவாக்கி சாதனை படைத்தார். நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்        1 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் மீண்டும் அம்மா அரசு தொடர வேண்டும் என்று வாக்களித்தார்கள். அதுமட்டுமல்லாது 43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டோம்.




மாணவர்களுக்கு மடிகணினியுடன் 14 வகை கல்வி உபகரணங்கள்  பசிப்பிணி போக்கும் வகையில் வண்ணம் 20 கிலோ அரிசி திட்டம் இப்படி பல தொலைநோக்கு திட்டங்களை அம்மா வழங்கினார்கள். அந்த திட்டங்களை வழங்குவதில்  தற்போது நிலை என்ன என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. அதுமட்டுமல்லாது திமுக 505 தேர்தல் .வாக்குறுதி கொடுத்தனர். எதையும் செய்யவில்லை. இந்த 5 மாத கால ஆட்சி இயலாமையே சாட்சியாக உள்ளது.  ஆனால் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக கூறுகின்றனர். திட்டங்களை மட்டும் அறிவிப்பதோடு சரி  செயல்பாட்டில் இல்லை.


 அதேபோல் கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க தென்காசியில் நான் பிரச்சாரம் செய்யும் பொழுது மக்கள் அதிமுகவிற்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். அதுமட்டுமல்லாது  தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை, கேஸ் மானியம் தரவில்லை,   அதேபோல் கல்விக் கடன் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு என்று திமுக மீது மக்கள் வருத்ததுடன் உள்ளனர் .



அதுமட்டுமல்லாது முதலமைச்சர் மதுரையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில்  பெண்களுக்கு பேருந்துக் இலவசம் என்று கூறினார். அப்போது  ஒரு பெண் மதுரைக்கு செல்ல கட்டணம் வசூல் செய்கின்றனர் என்று கூறினார்.  முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தார். இப்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சென்று அரசின் திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியுமா? எப்படி நிர்வாகம் செய்ய முடியும்?


தாய்மார்கள் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் அரசு தங்கள் மீது அக்கறை செலுத்தவில்லை என்று மனக் கவலை அடைந்துள்ளனர். ஆகவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைப் தருவார்கள்,’’ என்றுகூறினார்.


இதில் திருமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர் அன்பழகன், திருமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் லதா ஜெகன், கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி உட்பட பலர் இருந்தனர்.