மதுரையில் தி.மு.க., மாவட்ட செயலாளர் தி.மு.க.,வினரை ஆபாசமாக பேசியதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வினர் சாலை மறியல். வீடியோ எடுத்தவர்களை மிரட்டிய எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள்.
மதுரை தி.மு.க., வில் நடைபெறும் உட்கட்சி பூசல்
மதுரை மாநகர மாவட்ட தி.மு.க.,வின் மாவட்ட செயலாளராகவும், வடக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கோ.தளபதி மற்றும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர் மூர்த்தி என மாநகர திமுகவில் உட்கட்சி பிரச்னை நீடித்து வருகிறது. மதுரை மாநகரில் உள்ள தி.மு.க.,வில் தி.மு.க., பொறுப்பாளர்களை நியமிப்பதில் தி.மு.க., மாவட்ட செயலாளர் பணம் பெற்றுக்கொண்டு பதிவுகளை நியமிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மதுரை மாநகர் மாவட்டம் தெற்குவாசல் பகுதி 53ஆவது வட்ட பொறுப்பாளராக இருந்துவந்த கார்த்திகேயன் என்பவருக்கு பதிலாக அசோக்பாபு என்பவரை நியமித்தது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி தி.மு.க.,வினர் இன்று மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதியிடம் முறையிட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் கொடுத்த மிரட்டல்
அப்போது அங்கு வந்த தி.மு.க.,வினரை கோ.தளபதி அவதூறாக பேசியதாக கூறி, மாவட்ட செயலாளருக்கு எதிராக முழக்கமிட்டபடி திடிரென தி.மு.க.,வினர் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக, அழகர்கோவில் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., மாவட்ட செயலாளரை கண்டித்து தி.மு.க.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதனை வீடியோவாக பதிவு செய்தவர்களையும் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர் மிரட்டல் விடுத்து செல்போன்களை பறித்ததாக கூறப்படுகிறது. தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு எதிராக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தி.மு.க.,வினர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அழகர் கோயில் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.