அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு வந்தது முதல் தினந்தோறும் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு எதிராக முதலமைச்சர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ், 25 எம்எல்ஏக்களின் கட்சி பொறுப்புகளை பறித்து உத்தரவிட்டார். மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல்,எஸ்.பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்யபாமா,அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அடுத்தாக விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவுள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா
ஏற்கனவே அதிமுக 5 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், இன்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை தலைமைச்செயலகம் வந்த அவர், சபாநாயகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை வழங்கினார். இதனையடுத்து நாளை மறுநாள் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணையும் விழாவில் எம்.ஆர் விஜயபாஸ்கரும் இணையவுள்ளார்.
இபிஎஸ்க்கு ஷாக்
அதிமுக எம்எல்ஏக்கள் ஏற்கனவே 5 பேர் ராஜினாமா செய்த நிலையில், இன்று மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா செய்திருப்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது அதிமுகவின் எம்எல்ஏக்களின் பலம் 41ஆக குறைந்துள்ளது.
