அமைச்சர் சரத்குமாரை பதவியில் இருந்து நீக்குங்க
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்கட்சிகள் சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் மின் வெட்டு, விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தவெக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், கடந்த வாரம் தவெக அரசுக்கு எதிராக அதிமுக சார்பாக முதல் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த்து.
போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர்.?
அந்த வகையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக ஐபிஎல் போட்டியின் போது தனது மனைவியோடு கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்ற அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியாக புகார் எழுந்தது. இதற்கு அமைச்சர் தனது குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மாத்திரையை சாப்பிட முடியாததால் மாத்திரையை நொறுக்கி கொடுக்கப்பட்ட வீடியோ என விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இதனை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தவெக அரசுக்கு எதிராக திமுகவின் போராட்டம் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று காலை திமுக சார்பாக போராட்டம் நடந்த திமுக திட்டமிட்ட நிலையில், போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
திமுக போராட்டம் அறிவிப்பு
சென்னையில் ராஜரத்தினம் அரங்கம் அருகே திமுகவினர் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், அதனை போலீசார் அகற்றினர். மேலும் அங்கு கூடியிருந்த திமுகவினரை கலைந்து செல்லுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனால் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஏராளமான திமுகவினரும் கூடி வருவதால் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இதே போல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுகவின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது இதனையடுத்து போராட்டத்தில் பங்கேற்க வந்த திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
திமுகவினர் கைது
திமுக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் கூறுகையில், திமுக சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒருநாள் முன்னதாக அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை பெருநகர காவல் சட்டம் 41-ன் படி அந்த மனுவை பரிசீலிக்க 5 முழு வேலை நாள் அவகாசம் தேவை. எனவே உரிய கால அவகாசம் இல்லாததால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவிற்கு காவல் துறை சார்பாக அனுமதி மறுப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
