தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனை படைக்க திமுக திட்டமிட்டு வருகிறது. அதற்காக, ஓரணியில் தமிழ்நாடு, உங்களுடன் ஸ்டாலின் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், உடன்பிறப்பே வா – என்ற செயல்திட்டத்தின் மூலம் கட்சிக்குள் மிகப் பெரிய கட்டமைப்பு மாறுதலை செய்யத் தொடங்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளே கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மாவட்ட செயலாளர்கள் மாற்றம் – அடுத்தடுத்து வரும் அதிரடி
குறிப்பாக, உடன்பிறப்பே வா மூலம் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த மாவட்டச் செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகளை தனித் தனியாக சந்தித்து பேசினார் மு.க.ஸ்டாலின். அதில், அவர்கள் குறிப்பிட்ட நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள், புகார்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில், உண்மையான புகாருக்கு உள்ளான மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட சரியாக செயல்படாத மாவட்ட நிர்வாகிகளை அந்த பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்க உத்தரவிட்டார் ஸ்டாலின். அதற்கான பணிகள் தொடர்ச்சியாக அறிவாலயத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது புகாருக்குள்ளான, தேர்தல் நெருங்கும் நேரத்தில் மெத்தனமாக, சரியாக செயல்படாத நிர்வாகிகளை நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. தேர்தல் முடியும் வரை தாங்களே மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் எனவும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மாவட்டத்தில் சீட் பெற்றுக் கொடுத்துவிட முடியும் என்றும் நம்பிக்கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் தலைமீது இந்த உடன்பிறப்பே வா திட்டம் இடியாய் வந்து இறங்கியிருக்கிறது.
கோவை மாவட்டச் செயலாளர் நீக்கம்
அதன் முதற்கட்டமாக, கோவை மாநகர் மாவட்ட செயலாலராக பல ஆண்டுகளாக இருந்த நா. கார்த்தி அதிரடியாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிமுகவை இந்த தேர்தலில் பின்னுக்குத் தள்ளி கொங்கை தங்களது கோட்டையாக மாற்ற, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை தேர்தல் பொறுப்பாளராக திமுக நியமித்திருக்கும் நிலையில், நா.கார்த்தி நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செந்தில்பாலாஜிக்கு உரிய ஒத்துழைப்பு தராதது, தன்னைத் தாண்டி மாநகர் திமுகவில் எதுவும் செய்ய முடியாது என்று வாய்த் துடுக்காக பேசி வந்தது உள்ளிட்ட புகார்களில் அவர் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே மாதிரி, தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனிடம் இருந்த தொகுதிகள் பறிக்கப்பட்டு அவரை மேற்கு மாவட்ட செயலாராக நியமித்து, கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டது என திமுகவில் மாவட்ட வாரியாக அதிரடி மாற்றங்கள் தொடங்கியுள்ளன.
ஆறு மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிப்பு?
மேலும், சரியாக செயல்படாமலும் தொடர் புகார்களுக்கும் உள்ளாகியுள்ள ஆறு மாவட்டச் செயலாளர்களிடமிருந்து அந்த பொறுப்பை பறிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்பதால், திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் பதற்றத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் அமைப்பு ரீதியாக உள்ள 6 மாவட்டங்களை ஏழாக பிரித்து சென்னை தெற்கு என்ற புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்தும் டெல்டா மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது பற்றியும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்ட அமைப்புகளிலும் விரைவில் மாற்றங்கள் நடைபெறவுள்ளன.