இந்தியா முழுவதும் உள்ள 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாஜக முழுவதுமாக வாஷ் அவுட் ஆகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தோல்வியைத் தழுவி உள்ளன.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் மறு சீரமைக்கப்பட்ட பிறகு தற்போது இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மொத்தமுள்ள 36 இடங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் 11 இடங்களில் பாஜக முழுமையாக துடைத்து எறியப்பட்டுள்ளது. அவை எவை? பார்க்கலாம்.


துடைத்து வீசப்பட்ட பாஜக


சண்டிகர் மாநிலத்தில் ஒரேயொரு மக்களவைத் தொகுதி மட்டுமே உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது. அதேபோல லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.


லட்சத் தீவுகளில் உள்ள ஒற்றைத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிவாகை சூடியுள்ளார்.


மேகாலயா மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் பார்ட்டி 1 தொகுதியிலும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல மிசோரம் மாநிலத்தில், இருந்த 1 தொகுதியை சோரம் மக்கள் இயக்கம் பெற்றுள்ளது.


நாகாலாந்து  மாநிலத்தில் உள்ள 1 தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி தொகுதியை காங்கிரஸ்  வென்றுள்ளது.


பஞ்சாப்பில் 13-க்கு 0


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் ஒன்றைக்கூட பாஜகவால் கைப்பற்ற முடியவில்லை. இங்கு 7 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், 3 தொகுதிகளை ஆம் ஆத்மி தன் வசம் ஆகியுள்ளது. சிரோமணி அகாலி தளம் ஒரு இடத்திலும் சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.


அதேபோல சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 1 தொகுதியைக் கைப்பற்றி உள்ளது.  


தமிழ்நாடு மட்டும் ஸ்பெஷல்


தமிழ்நாட்டில் மட்டும் 39 தொகுதிகளிலும் பாஜகவாலோ அதன் கூட்டணிக் கட்சிகளாலோ ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. பஞ்சாப் தவிர மீதி 9 மாநிலங்களிலும் ஓரிரு தொகுதிகள் மட்டுமே உள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. இங்கு ஓரிடத்தில்கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை.


திமுக 22 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய 3 கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றிவாகை சூடின. மதிமுக ஓர் இடத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் என திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிக் கனியைச் சுவைத்தன.


எனினும் பாஜக கூட்டணியால் ஓரிடத்தைக்கூடப் பெற முடியவில்லை. இதற்கிடையே ராகுல் காந்தி, தமிழ்நாட்டுக்குள் ஒருபோதும் உங்களால் நுழைய முடியாது என்று மக்களவையில் பேசிய வீடியோ நேற்றில் இருந்து வைரலாகி வருகிறது.