நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அந்த கட்சி தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியிருக்கிறது. சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து, அடி சறுக்குவதால் அதிமுக நிர்வாகிகள் மத்தியிலேயே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.


நீக்கிய பழனிசாமி, பொதுச்செயலாளர் ஆனார்


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவில் முதலமைச்சராக்கப்பட்ட பழனிசாமி, சசிகலா சிறைக்கு சென்றதும் அவரையும் கட்சியின் துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினரையும் கட்சியை விட்டே ஒதுக்கினார்.  பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளான வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரையும் கட்சியை விட்டு பொதுக்குழு மூலம் நீக்கி, எடப்பாடி, தன்னை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரியும்.


களத்தில் பலிக்காத எடப்பாடி முயற்சிகள்


ஆனால், தன்னை அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக ஆக்கிக்கொள்வதற்காக உட்கட்சியில் அவர் எடுத்த அரசியல் முயற்சிகளில் பாதியை கூட கள அரசியலில், தேர்தலில் அரசியல் செயல்பாட்டில் எடப்பாடி பழனிசாமி காட்டவில்லை என அதிமுக தொண்டர்கள் மத்தியில் புகைச்சல் எழுந்திருக்கிறது. சாதரணமாக, இந்த சலசலப்புகள் அதிமுகவில் ஏற்படவில்லை. அதற்கு காரணமும் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த எட்டு தேர்தலில்களிலும் தோல்வியே அவருக்கு பரிசாக கிடைத்துள்ளது. எத்தனை கூட்டங்கள் போட்டாலும், எத்தனை முறை எச்சரிக்கை விடுத்தாலும் அவரது ஆணையை கட்சி நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளாததும், ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன் போன்று எடப்பாடி பழனிசாமி மீது நிர்வாகிகளுக்கு பயம் இல்லாததும் இப்படியான தோல்விக்கு காரணம் என அதிமுக தொண்டர்கள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.


எடப்பாடி பழனிசாமியின் தோல்விகள் :



  1. ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் அந்த கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், மதுசூதனனுக்கு தோல்வியே மிஞ்சியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் டிடிவி தினகரன் பெருவாரியான வெற்றியை பெற்றார்.



  1. அதிமுகவில் இருந்து தினகரன் அணிக்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த தொகுதிகள் உள்ளிட்ட 22 சட்ட சபை தொகுதிகளுக்கு அதிமுக ஆட்சி கால கட்டத்தில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த நேரத்திலேயே தேர்தல் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சியாக இருந்த திமுக 13 தொகுதிகளில் வென்ற நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.



  1. அதே நேரத்தில் நடைபெற்ற 2019 மக்களை தேர்தலில் கூட ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் மட்டுமே அதிமுக சார்பில் தேனியில் வெற்றி பெற்றார்.  ஆளுங்கட்சியாக அதிமுக இருந்தபோதும், 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணி கோட்டை விட்டது.  எதிர்க்கட்சியாக இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.



  1. அதே ஆண்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.



  1. பின்னர், 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த அதிமுக, திமுகவிடம் தோல்வியுற்று 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பறிகொடுத்தது.



  1. சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய அளவில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை



  1. திமுக ஆட்சியில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வி அடைந்தது.



  1. ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு 2022ஆம் ஆண்டில் கட்சியின் பொதுச்செயலாளராகவே ஆகி, தனிப்பெரும் தலைவராக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை நிறுத்தினார். ஆனால், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்தார்.



  1. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பெரிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, பாமக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் தூண்டில் போட்டு பார்த்தார். ஆனால், அவரது முயற்சிகள் எதுவும் கைக் கூடவில்லை. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட எடப்பாடி பழனிசாமியோடு கைக்கோர்க்க விரும்பவில்லை. அதனால், புதிய பாரதம் உள்ளிட்ட உதிரி கட்சித் தலைவர்களை தேடி தேடி சென்று அதிமுக தலைவர்கள் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.


இறுதியாக, தேமுதிக மட்டுமே கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக பாஜக அழைப்பு விடுத்தும் அதிமுகவோடு கூட்டணி என்று அறிவித்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.



  1. நாடாளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் ராணி வெறும் 5 ஆயிரத்து 267 வாக்குகள் மட்டுமே பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


இப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக தோல்வியுற்று வருவதால், அவரது தலைமை மீது நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.


கோவையில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய அண்ணாமலை


அதோடு, கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுவிடம் ஆட்சியை பறிகொடுத்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றியது அதிமுக. அதனால், கோவை மாவட்டம் தங்கள் கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இந்த முறை அதனையும் கோட்டை விட்டிருக்கின்றனர்.


பாஜக வேட்பாளாராக கோவையில் களமிறங்கிய அண்ணாமலை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை 3வது இடத்திற்கு தள்ளி 4, 50, 132 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்திருக்கிறார். பலம வாய்ந்த முன்னாள் அமைச்சராகவும் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற உறுதுணையாக இருந்தவராகவும் கூறப்படும் எஸ்.பி.வேலுமணியின் சொந்த மாவட்டத்திலேயே அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை அதிமுக தொண்டர்களே நம்பமுடியாமல் திகைத்து வருகின்றனர்.