மத்தியில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைத்த மொரார்ஜி தேசாய் தொடங்கி தற்போது உள்ள மோடி வரையில், பிரதமர் பதவியை அலங்கரித்தவர்களில் பலர் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். இந்தியாவில் மாநில முதலமைச்சர் பதவி என்பது, அவ்வளவு முக்கியமாக கருதப்படுகிறது.


அந்த வகையில், நீண்ட காலமாக முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் முன்னாள் மேற்குவங்க முதலமைச்சர் ஜோதி பாசுவின் சாதனையை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமன் செய்துள்ளார். 


இந்த சூழலில், நீண்ட காலமாக முதலமைச்சராக பதவி வகித்தவர்களின் பட்டியலை கீழே காண்போம்.


பவன் குமார் சாம்லிங்:


சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங். சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த இவர், முதல் முறையாக கடந்த 1994ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். மொத்தம் 24 ஆண்டுகள் 166 நாள்களுக்கு முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.  


நவீன் பட்நாயக்:


ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக். பிஜு ஜனதா தள கட்சியின் தலைவரான இவர், கடந்த 2000ஆம் ஆண்டில், பாஜகவுடன்  கூட்டணி அமைத்து அரசாங்கத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார். முதல்முறையாக, முதலமைச்சராக 2000ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி பதவியேற்றார். இவர் மொத்தம், 23 ஆண்டுகள் 140 நாள்களுக்கு முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.


ஜோதி பாசு:


மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜோதி பாசு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர், முதல்முறையாக 1977ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். மொத்தம் 23 ஆண்டுகள் 138 நாள்களுக்கு முதலமைச்சராக இருந்த இவருக்கு, பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், கட்சி சம்மதிக்காத காரணத்தால் அந்த வாய்ப்பை தவறவிட்டார் ஜோதி பாசு.


கெகாங் அபாங்:


அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கெகாங் அபாங். காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனநாயக முன்னணி என பல்வேறு கட்சிகளில் இருந்திருக்கிறார். இவர், மொத்தமாக 22 ஆண்டுகள் 250 நாள்களுக்கு முதலமைச்சராக பதவி வகித்தார். முதல்முறையாக 1980ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார்.


லால் தன்ஹாவ்லா:


மிசோரம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லால் தன்ஹாவ்லா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், 22 ஆண்டுகள் 60 நாள்களுக்கு முதலமைச்சராக பதவி வகித்தார். முதல்முறையாக 1984ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார்.


வீரபத்ர சிங்:


இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், 21 ஆண்டுகள் 13 நாள்களுக்கு முதலமைச்சராக பதவி வகித்தார். முதல்முறையாக, 1983 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார்.


மாணிக் சர்க்கார்:


திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார். 19 ஆண்டுகள் 363 நாள்களுக்கு தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், முதல்முறையாக 1998ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார்.


மு. கருணாநிதி:


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி. திமுகவின் முன்னாள் தலைவரான இவர், மொத்தம் 18 ஆண்டுகள் 362 நாள்களுக்கு முதலமைச்சராக பதவி வகித்தார். முதல்முறையாக, 1969ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். 


பிரகாஷ் சிங் பாதல்:


பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். சிரோமணி அகாலி தள கட்சியின் முன்னாள் தலைவரான இவர், மொத்தம் 18 ஆண்டுகள் 350 நாள்களுக்கு முதலமைச்சராக பதவி வகித்தார். முதல்முறையாக, 1970ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். 


யஷ்வந்த் சிங் பர்மர்:


இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் யஷ்வந்த் சிங் பர்மர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், 18 ஆண்டுகள் 83 நாள்களுக்கு முதலமைச்சராக பதவி வகித்தார். முதல்முறையாக, 1952 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார்.