Mulayam Singh Yadav Died : இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் (82) இன்று காலை குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.  அவருக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


தமிழ்நாடு முதல்வர் மு,க ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், எனது சகோதர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், சமாஜ் வாதி கட்சியின் தொண்டகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக நின்ற இந்திய அரசியலில் மிக உயர்ந்த நபர்களில் ஒருவரான திரு முலாயம் சிங் மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக சார்பில் திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு, மறைந்த முன்னாள் முதல்வர்  முலாயம் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்துவார் என்று தெரிவித்துள்ளார். 






உத்தர பிரதேச மாநில அரசு முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அவர்களின் மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என உத்தர்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், முலாயம் சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். 


உத்தர பிரதேச மாநில அரசு முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும், சாதாரண சூழலில் இருந்து வந்த முலாயம் சிங் அவர்களின் சாதனைகள் அசாதாரணமானவை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 


சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். வட இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர். சமூக நீதியின் தூணாக திகழ்ந்த அவரது மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் எனது அன்பு சகோதரர் அகிலேஷ் சிங் யாதவுக்கும், சமாஜ்வாதிக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மாநிலங்களவை உறுப்பினரும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ்  இரங்கல் தெரிவித்துள்ளார்.