நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தொலைப்பேசியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.


ராகுல் காந்தியிடன் கமலா ஹாரிஸ் பேசியது என்ன? ஆனால், அமெரிக்காவில் இந்தாண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களிடையேயான உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியான கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்படுவாரா என சமீக நாள்களாக கேள்வி எழுந்து வருகிறது.


தற்போதைய அதிபர் பைடனே, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், வயது முதிர்வு காரணமாக பைடனை திரும்ப பெற வேண்டும் என ஜனநாயக கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


 






குறிப்பாக, அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதத்தில் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டிரம்பை சமாளிக்க முடியாமல் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் பைடன். முக்கிய நிகழ்ச்சிகளில் பைடன் சுயநினைவின்றி நிற்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறாரா கமலா ஹாரிஸ்? சமீபத்தில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் தலைவர்கள் இருந்த திசையில் இருந்து தனியே போய் நின்றது, இன்றைய நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபரை புதின் என குறிப்பிட்டது, துணை அதிபர் கமலா ஹாரிஸை டிரம்ப் என குறிப்பிட்டது பைடனின் மனநிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பின.


இப்படிப்பட்ட சூழலில், பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக முன்மொழிய ஜனநாயக கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் பின்வாங்க மாட்டேன் என பைடன் திட்டவட்டமாக கூறி வருகிறார்.


இச்சூழலில், ராகுல் காந்தியிடம் கமலா ஹாரிஸ் தொலைப்பேசியில் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.