ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வான கே ரகுராம கிருஷ்ண ராஜு அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்த நிலையில், காவல்நிலையத்தில் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பி.வி. சுனில் குமார் மற்றும் பி.எஸ்.ஆர். சீதாமாஞ்சநேயுலு ஆகிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவர்களை தவிர, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆர். விஜய் பால் மற்றும் குண்டூர் அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஜி. பிரபாவத் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு மாதத்திற்கு முன்பே காவல்துறைக்கு இ மெயில் மூலம் புகார் அனுப்பியிருந்தார் ராஜு. சட்ட ஆலோசனைக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் உள்பட பலர் மீது நேற்று இரவு 7 மணிக்கு வழக்கு பதிவு செய்தேன்.


புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காரணத்தால், பழைய ஐ.பி.சி சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2021ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கைது செய்து தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. ராஜு அளித்த புகாரில், "ஆந்திர அரசின் சிபிசிஐடி என் மீது பொய் வழக்குப் பதிவு செய்தது.


கடந்த 2021ஆம் ஆண்டு, மே 14ஆம் தேதி, உரிய நடைமுறைகளை கடைபிடிக்காமல் கைது செய்யப்பட்டேன். கொடுமைப்படுத்தப்பட்டேன். சட்ட விரோதமாக போலீஸ் வாகனத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். அதே இரவில் வலுக்கட்டாயமாக குண்டூருக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.


ராஜு கைது செய்யப்பட்டபோது, ​சிபி-சிஐடியின் தலைவராக பதவி வகித்தவர் சுனில் குமார். உளவுத்துறை தலைவராக இருந்தவர் சீதாராமஞ்சநேயுலு. சிபி-சிஐடியின் உதவிக் கண்காணிப்பாளராக பதவி வகித்தவர் பால். அப்போதைய முதலமைச்சர் ஜெகனை விமர்சித்த காரணத்தால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராஜு குறிப்பிட்டுள்ளார்.