உலக வரலாற்றில் ஒரு மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்திக்கு எதிரான குரல்கள்  இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து தற்போதுதான் கேட்கத் தொடங்கி உள்ள நிலையில், விடுதலைக்கு முன்பே இத்தகைய குரல்களின் பிறப்பிடமாக தமிழகம் இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் இந்திய  விடுதலைக்கு பிறகு இந்தியாவின் வடக்கு பகுதியையும் தெற்கு பகுதியையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் விவாதங்கள் எழத் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் இந்தி மொழியை அனைவரையும் கற்க செய்வதே இதற்கு தீர்வாக அமையும் என காந்தியடிகள் கருதினார்.




அதன்படி இந்தி பேசாத மக்கள் அதிகம் வசிக்கும் தென்னிந்தியாவில் தக்‌ஷிண பாரத் இந்தி பிரச்சார் சபாவை 1918ஆம் ஆண்டு காந்தியடிகள் தொடங்கி வைத்து அவர் இறக்கும் வரை இச்சபையின் தலைவராக இருந்தார். நாடு முழுவதும் இந்தி மொழியை கொண்டு செல்லக்கூடிய முதல் முன்னெடுப்பாக இதனை கூறலாம். இந்த நிலையில் 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும், காந்தியடிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் விளங்கிய ராஜகோபாலாச்சாரியார், சென்னை மாகாண பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி பயில்வது கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு இந்தி மொழி திணிப்புக்கு எதிரான முதல் கிளர்ச்சியை தமிழகத்தில் உருவாக்கியது.




மறைமலையடிகள், கி.அ.பெ.விஸ்வநாதம், பெரியார், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில் நடந்த போராட்டத்தில் சிறை சென்ற நடராசன் 1938ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உடல்நலம் குன்றி உயிரிழந்தார். மொழிப்போராட்டத்தின் முதல் களப்பலி நடராசன்தான். அவரது உடல் வடசென்னையில் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட இறுதி நிகழ்வில் பேசிய அண்ணா, நடராசனின் மரணம் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார். ''அதோ அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவரது ரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால், அவருடைய முகத்தைப் பாருங்கள். தன்னுடைய கலாசாரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடி அப்போரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்? நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீர வாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா?’’ என உரை நிகழ்த்தினார் அண்ணா. இதனை தொடர்ந்து 1939ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தாளமுத்துவும் மார்ச் 13ஆம் தேதி உயிரிழந்தார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடந்த நிலையில், கட்டாய இந்தி மொழி பயில்வதற்கான அரசாணை திரும்பப்பெறப்பட்டது.  




எனினும் இந்தி ஆட்சி மொழியாக்க அலுவல் மொழிச்சட்டம் 1963ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் வலுப்பெற்றன. 1964ஆம் ஆண்டு திருச்சி ரயில் நிலையத்தில் இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்ற முழக்கத்துடன் கீழப்பழூர் சின்னசாமி என்பவர் தீக்குளித்து இறந்தது களத்தை மீண்டும் சூடாக்கியது.  1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்திய ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் அறிவிப்பு தமிழகத்தை ரத்தத்தில் தோயவைத்தது. இந்தி திணிப்பை எதிர்த்து ஆரம்பத்தில் திமுக உள்ளிட்ட சில இயக்கள் மட்டுமே போராடி வந்த நிலையில் மாணவர்களின் பங்களிப்பு கட்சி சார்பற்ற போராட்டமாக மாற்றி பெரும் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. 




மாணவர்களின் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த பேரறிஞர் அண்ணா, போராட்டத்தை சொன்னபோதிலும் அது கட்டுக்கடங்கா காட்டுத்தீயாய் பரவியது. தீக்குளித்தும், விஷம் அருந்தியும் அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிராயுதபாணிகளான பள்ளி, கல்லூரி மாணவர்களை அடக்க இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாநிலத்திற்குள் ராணுவம் வரவழைக்கப்பட்டது.  பெரிய தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இவ்வுளவு பெரிய போராட்டத்தை கட்டமைத்ததில் திராவிட இயக்க பத்திரிக்கைகளின் பங்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 




போராட்டத்தின் தாக்கத்தை உணர்ந்த அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டதன் விளைவாக தமிழகத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்தது. அப்போது தமிழ், ஆங்கிலத்தை உள்ளடக்கிய இருமொழிக்கொள்கை கொண்டு வரப்பட்டு அது தற்போது வரை நடைமுறையில் உள்ளது.